கர்நாடக தேர்தல் முடிவுகளில் ( Karnataka Election Result 2023 ) காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து, கட்சி அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


காங்கிரஸ் கொண்டாட்டம்:


தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் கூறியபடியே, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக பெங்களுரூ மற்றும் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இசை வாத்தியங்களை வாசித்து, பாட்டு பாடியும், நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு, காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகளையும் பகிர்ந்து வருகின்றனர். இதனால், காங்கிரஸ் அலுவலகங்கள் விழாகோலம் பெற்றுள்ளது. இதேபோன்று, தமிழகத்தின் பல பகுதிகளிலும் காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கர்நாடக தேர்தலில் கிடைத்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.









களையிழந்த பாஜக அலுவலகம்:


மறுமுனையில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் தோல்வியை சந்தித்துள்ளது. அமைச்சர்கள் 8 பேர் உட்பட பல நட்சத்திர வேட்பாளர்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதன காரணமாக பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று வரை கட்சி நிர்வாகிகளால் நிரம்பி வழிந்த பாஜக அலுவலகம், இன்று ஆள் அரவின்றி நிசப்தமாக உள்ளது. இந்த தோல்வி உறுதியானால் தென்னிந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட பாஜக ஆட்சி இல்லாத சூழல் உருவாகும்.


குவியும் வாழ்த்துகள்:


10 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடகாவில் நேரடியாக ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸிற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை  தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், கர்நாடக முதலமைச்சர் போட்டியிலிருக்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா மற்றும் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகிய இருவருக்கும் தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்.