உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல... எந்த தேர்தல் வந்தாலும் வினோதமாக பார்க்கப்படுவது, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடுவது தான். இதனால் மனக்கசப்புகள், வாக்குவாதங்கள், சில நேரங்களில் பிரிவுகள் கூட ஏற்படும். பல நேரங்களில் அதுவே வெட்டு குத்து வரை செல்வதை கூட கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம்.


இங்கே ஒருவர் தனக்கு எதிராக தன் மனைவியை போட்டியிடச் செய்கிறார். அதுவும் தான் போட்டியிடும் வார்டிலேயே! அதற்கு வலுவான காரணத்தையும் அவர் வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் காரைக்குடி காட்டு தலைவாசலை சேர்ந்த மெய்யர் என்பவர், இதற்கு முன் 3 முறை கவுன்சிலராக இருந்துள்ளார். இம்முறையும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதே வார்டில் களம் காண்கிறார். 




அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தது மட்டுமல்லாமல், தன் மனைவியையும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வைத்தார். ஒருவேளை மாற்று வேட்பாளராக இருக்கலாம் என்று பார்த்தால், இல்லை இல்லை... அவரும் வேட்பாளர் தான். ஏன் இந்த ஏற்பாடு? ஒரு ஓட்டு கூட பிரிந்து போய்விடக்கூடாது என நினைக்கும் உள்ளாட்சி தேர்தலில், தனக்கு எதிராக தன் மனைவியையே துணிந்து போட்டியிட வைக்கும் காரணம் என்ன? அதற்கு அவர் சொல்லும் காரணம், ‛நம்பர்’ சென்டிமென்ட். 


இதென்ன புதுசா இருக்குன்னு தோனுதுல? உண்மை தான், தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை ஒற்றை படையாக இருக்க வேண்டும் என்பது இவரது சென்டிமெண்ட். உதாரணத்திற்க 5 பேர், 7 பேர், 9 பேர் என ஒற்றைப் படையாக எண் இருக்க வேண்டுமாம். அதுவே 6 , 8 , 10 என்று வந்தால், அதை ஒற்றை படையாக மாற்றவே, தன் மனைவியை பயன்படுத்துகிறார்.


தனது வார்டில் தன்னுடன் சேர்த்து 8 வேட்பாளர்கள் போட்டியிட்டால், உடனே தன் மனைவியை வாபஸ் பெற்று விடச் செய்வது இவரது ஐடியா. அவர் வாபஸ் பெற்றார், 8 என்பது 7 ஆகி விடும். இப்படி ஒற்றைப் படை சென்டிமென்டிற்காக தொடர்ந்து, இதோடு சேர்த்து 4வது முறையாக தனது வார்டில் தன் மனைவியை போட்டியிடச் செய்கிறார் மெய்யன். 




இது குறித்து அவரிடம் கேட்ட போது, ‛‛எப்போதும் ராசிக்காக இருண்டு பேருக்கும் மனுத்தாக்கல் செய்வேன். இரட்டை படை எனக்கு ஆகாது. ஒற்றை படைக்காக என் மனைவியை மனுத்தாக்கல் செய்ய வைப்பேன். 4 முறை போட்டியிட செய்து, இதுவரை 3 முறை வெற்றியும் பெற்றிருக்கிறேன். எனது சென்டிமென்ட் எனக்கு உதவியிருக்கிறது. 4வது முறையாக என் சென்டிமென்ட் தொடரும் என நம்புகிறேன். நான் எதிர்பார்த்தபடி, எனது மனைவியையும் சேர்த்து ஒற்றை படையாக தற்போது வேட்பாளர்கள் எண்ணிக்கை உள்ளது. வார்டில் பரிட்சையமான எனக்கு சுயேச்சை வேட்பாளர் என்றும் பாராமல், வெற்றியை மக்கள் அள்ளித் தருவார்கள்,’’ என்றார். 


உலகத்தில் எதற்கெல்லாம் சென்டிமென்ட் பார்க்க வேண்டும் என்று இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும், இது அவரது நம்பிக்கை. அது நிறைவேறியிருப்பதால், இன்னும் அழமாக நம்புகிறார். அவருக்கு வெற்றி கிட்டுமா பொறுத்திருந்து பார்க்கலாம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண