திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்யை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள காமராஜர் சிலை அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "வரக்கூடிய தேர்தல் என்பது எப்பொழுதும் சந்திக்கும் தேர்தலை போன்று இல்லை, இது மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் என்று எண்ணக்கூடிய அளவிற்கான ஒரு தேர்தல். ஏனென்றால்  நிச்சயமாக  மறுபடியும் இந்த தேர்தலுக்கு பின் பிஜேபி ஒன்றியத்தில் டெல்லியில் ஆட்சிக்கு வராது. ஆனால் அப்படி ஒரு விபத்து நேரும் என்றால் இது தான் இந்தியாவின் கடைசி தேர்தல்.  அதன்பின் சர்வாதிகாரம் மட்டுமே மிஞ்சியிருக்கும். இந்த நாட்டை மீட்டெடுக்கக்கூடிய தேர்தல் இந்த தேர்தல். சாதாரண  சாமானிய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கக்கூடிய தேர்தல் இந்த தேர்தல். மீனவர்கள், விவசாயிகள், சகோதரிகள் என அனைவரின் உரிமையையும் மீட்டெடுக்கும் தேர்தல். பிரதமர் வெள்ளப்பாதிப்பின் போது வரவில்லை, நெல்லை தூத்துக்குடியை பார்வையிடவில்லை, நிதியமைச்சரை அனுப்பினார். ஆனால் ஒரு ரூபாய் கூட வரவில்லை. ஆனால் தேர்தல் வந்தது வாரத்திற்கு வந்தது வாரத்திற்கு எட்டு நாள் இருந்தால்  எட்டு நாளும் தமிழ்நாட்டில் இருப்பார். அந்த அளவிற்கு தமிழகத்தை இரண்டு நாளுக்கு ஒருதடவை சுற்றி வருகிறார்.


ஆனால் எத்தனை தடவை வந்தாலும் தமிழ்நாட்டில் ஓட்டு தேராது என்று தெரியும். இருந்தாலும் 3 வது இடத்திற்காவது முயற்சி  செய்கிறார். தேர்தல் வந்ததும் தமிழ் மீது பிரதமருக்கு பாசம் வந்துவிட்டது. அவர் திருக்குறள் தான் சொல்லுவார், ஆனால் அது திருக்குறள் தானா என்று நம்மால் கண்டுபிடிக்க முடியாது. இதில் தமிழ் தெரியவில்லை, தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிறார். எங்களை ஹிந்தி கற்றுக்கொள்ள சொல்வது போல  நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் ஒன்றும் பிரச்சினையில்லை என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், இது குறித்து முதல்வரிடம் சொன்னால் ஒரு நல்ல ஆசிரியரை நியமித்து நிச்சயமாக டெல்லிக்கு அனுப்பி வைத்திருப்பார். ஆனால் இனி டெல்லியில் இருக்க மாட்டீர்கள் என்றார். மேலும் பிரதமருக்கு தமிழ் மீது பற்று வந்தது போல அண்ணாமலை தமிழ் மக்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். பிஞ்சுபோன செருப்புக்கு சமம் என்று பேசுகிறார். அப்படியென்றால் அது தான் பிஜேபியின் உண்மையான முகம். தொடர்ந்து தமிழ்நாட்டில் தமிழர்களை வஞ்சித்துக்கொண்டிருக்கும் ஆட்சி பிஜேபி. உலகத்திலேயே பெரிய ஊழல். அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நீதிமன்றம் சொல்கிறது. சட்டப்பூர்வமான ஊழல் செய்ய கற்றுக் கொடுக்கக்கூடியவர்கள் பிஜேபி. ஆனால் மோடி கறை படாத கரங்கள் சுத்தமான கரங்கள் என்று பேசுவார். ஆனால் மிகப்பெரிய ஊழலுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள் தான். எதிர்க்கட்சியில் இருக்கும் தலைவர்கள் மீது தான் 90% வழக்கு. பிரதமரை கேட்டால் அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று சொல்கிறார். அதுவே அவர்கள் பிஜேபிக்கு வந்துவிட்டால் உடனே அந்த வழக்கு காணாமல் போய்விடும். தேர்தல் நேரத்தில் வந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கி தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கின்றனர்.  


ஏதாவது பிரச்சினை என்று வந்தால் மக்களை திசை திருப்ப வேண்டும். அது தான் இவர்களுக்கு தெரிந்த அரசியல். தன்னுடைய அரசியலுக்காக இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் என பிரித்து அடக்கி ஒடுக்கி அதற்குள்ளே ஒரு அரசியலை உருவாக்கி குளிர்காய்கிறார்கள்,  தென்னிந்தியாவில் அதற்கு இடம் கொடுக்கவில்லை, தமிழ் நாட்டில் சுத்தமாக இடம் கொடுக்கவில்லை, ஆனால் இப்பொழுது வட இந்தியாவில் இருப்பவர்களும் இவர்களை பற்றி புரிந்து கொண்டிருக்கிறார்கள். வேலையில்லா  திண்டாட்டம், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள். இப்படிப்பட்ட சர்வாதிகார, மக்கள் விரோத ஆட்சி இவர்களின் ஆட்சி. இவர்களின் ஆட்சி இரண்டே இரண்டு பேருக்காக தான் நடக்கிறது. இவர்களின் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார்.பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று. இது முதல்வர் தரும் ஆயிரம் ரூபாய் இல்லாமல் இந்த ஒரு லட்ச ரூபாய் ஒன்றியத்திலிருந்து வரக்கூடிய பணம். பிஜேபி சொன்ன 15 லட்சம் மாதிரி இல்லை. எனவே கூட்டணி வேட்பாளரான  காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.