Kangana Ranaut: அமிதாப் பச்சனுக்கு பிறகு தனக்கு தான் திரைத்துறையில், அதிக மரியாதை கிடைப்பதாக கங்கனா ரனாவத் பேசியுள்ளார்.
கங்கனா ரனாவத்:
பாலிவுட் திரையுலகில் நடித்ததின் மூலம், பல சர்ச்சைக்குரிய கருத்துகள் மூலமும் பிரபலமானாவர் கங்கனா ரனாவத். இந்நிலையில், நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் அவர் போட்டியிடுகிறார். வரும் 1ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி தொகுதி முழுவதும் அவர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த நேரங்களில் அவர் சொல்லும் கருத்துகள் பல சர்ச்சகளையும் ஏற்படுத்தி வருகின்றன. தேஜஸ்வி யாதவ் என்பதற்கு பதிலாக, தேஜஸ்வி சூர்யா என்ற பாஜக தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையானது.
அமிதாப் பச்சன் உடன் ஒப்பீடு:
இந்நிலையில் மண்டி தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட கங்கனா ரனாவத், “நான் ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, மணிப்பூர் என நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எனக்கு வியப்புதான். ஏனெனில், அந்த அளவுக்கு மக்கள் என்மீது அன்பு பொழிந்து வருகின்றனர். நடிகர் அமிதாப் பச்சனுக்குப் பிறகு, இந்தி திரைத்துறையில் யாருக்காவது இவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைக்கிறது என்றால், அது எனக்கு இதை என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்” என பேசியுள்ளார். இந்த பேச்சுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ”நீங்களும், அமிதாப் பச்சனும் ஒன்றா.. நீங்கள் ஹிட் கொடுத்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டதே..!” எனவும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பாலிவுட்டை விட்டு விலகலா?
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத்திடம், தேர்தலில் போட்டியிடும் நீங்கள், இந்தி திரையுலகை விட்டு விலக போகிறீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு, ”பாலிவுட் திரையுலகை விட்டு என்னால் இப்போது விலக முடியாது. என்னுடைய பல படங்கள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன” என பதிலளித்துள்ளார்.
கங்கனா போட்டியிடக்கூடிய, வரலாறு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொகுதியானது, காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள தொகுதியாகும். இந்த சூழலில் ரனாவத் வெற்றி பெறுவது என்பது ஒரு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தற்போதயை மாநில பொதுப்பணி அமைச்சரான விக்கிரமாதித்யா சிங் போட்டியிடுகிறார்.