தமிழகம் முழுவதும் வருகிற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று  நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சியினர்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி , மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு  முதன்முறையாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மேயர் பதவியை குறி வைத்து பெண் வேட்பாளர்களை அரசியல் கட்சியினர் களமிறக்கி உள்ளனர்.



 

முதன்முறையாக தேர்தலில் களம்காணும் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர்கள்  காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமைக்குரிய வரலாற்றில் இடம்பிடிக்க போட்டா  போட்டுக்கொண்டு வாக்காளர்களை கவர பட்டு நெசவு செய்தும், தையல் கடையில்  துணிகளுக்கு தையல் தைத்து கொடுத்தும், டீக் கடைகளில் டீ போட்டு கொடுத்தும், உணவகங்களில் பூரி மாவை திரட்டிக் கொடுத்தும், ஆம்லெட் போட்டுக்கொடுத்தும், காய்கறி, மளிகைக் கடைகளில் விற்பனை செய்தும் என பல்வேறு யுக்திகளை தங்களது பிரச்சாரத்தின் போது பயன்படுத்தி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து  வருகின்றனர்.






அந்தவகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 35வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் கிரிஜா இன்றைய தினம் 35வது வார்டுக்கு உட்பட்ட வளத்தீஸ்வரர் கோவில் தெருவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



 

அப்போது காலி குடத்தில் குடிநீர் பிடிக்க வெளியே வந்த வாக்காளர் ஒருவரிடம் காலிக் குடத்தை பெற்று  அக்குடத்தில் குடிநீரை நிரப்பி அக்குடத்தினை இடிப்பில் சுமந்தவாறு சென்று வாக்காளரிடம் கொடுத்து தான் வெற்றி பெற்றால் மாநகராட்சி மூலம் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள அனைவரது வீட்டிற்கே நேரடியாக குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதியளித்து நூதன முறையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அப்பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளிகளுக்கு செங்கலை எடுத்துக்கொடுத்தும், அதிக பாரமுள்ள மணல் அண்ணக்கூடையினை தொழிலாளியின் தலையில் வைத்து கொடுத்து உதவியும் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.வாக்கு சேகரிப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.