காஞ்சிபுரம் மாநகராட்சி 27-வது வார்டில், மக்கள் நீதி மையம் சார்பில் கல்லூரி மாணவி தேர்தலில் களம் காணவுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து, அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட முருகன் குடியிருப்பு 27-வது வார்டில், ஜெய்சங்கர் என்பவரின் இருபத்தி ஒன்னு வயது மகள் பவித்ரா தற்போது மக்கள் நீதி மையம் சார்பில் களம் இறங்கியுள்ளார். பவித்ரா, அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் படிப்பில் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார். இளம் வயது வேட்பாளர் என்பதால் முருகன் குடியிருப்பு 27-வார்டில் இவர் தற்பொழுது பேசும் பொருளாய் வலம் வந்துள்ளார். மேலும் இவர் 2 k கிட்ஸ் என்பதால் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளார். வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள பவித்ரா விரைவில், வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவி ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தது அப்பகுதியில் பேசுபொருள் ஆகியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, மாங்காடு மற்றும் குன்றத்தூர் நகராட்சி, ஶ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள், குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்சியிள் 18 வார்டுகள் என 156 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
அதையொட்டி கடந்த 28ம் தேதி முதல் மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர் , மாங்காடு நகராட்சி மற்றும் வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலகங்களில் நேற்று வரையில் 114 நபர்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுவதையொட்டி இன்று காலை 10 மணி முதல் திமுக, அதிமுக, பா.மக. மக்கள் நீதி மய்யம், பா.ஜ.க உள்ளிட்ட பிற கட்சிகள் மற்றும் சுயேட்சையினர் என மொத்தம் 436 நபர்கள் இன்று ஒரே நாளில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 147 நபர்களும், குன்றத்தூர் நகராட்சியில் 96 நபர்களும்,மாங்காடு நகராட்சியில் 58நபர்களும், உத்திரமேரூர் பேருராட்சியில் 28நபர்கள், வாலாஜாபாத் பேருராட்சியில் 57 நபர்கள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளில் 50 நபர்களும் என மொத்தம் 436 பேர் இன்று ஒரே நாளில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதுவரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 156 பதவிகளுக்கு 550 நபர்கள் போட்டியிட வேட்புமனுகளை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.