காஞ்சிபுரம் மாநகராட்சி 

 

ஆன்மீக ரீதியாக மட்டுமில்லாமல், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்ற நகரமாக காஞ்சிபுரம் நகரம் விளங்கி வருகிறது. அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரம் சுதந்திரத்திற்கு முன்பு 1921 ஆம் ஆண்டு 40 வார்டுகளுடன் நகராட்சி அந்தஸ்து பெற்றது. முதல் நகராட்சி தலைவராக ராவ் பகதூர் சம்மந்தர் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இதுவரையில் 19 நபர்கள் நகர்மன்ற தலைவர்கள் பதவி வகித்துள்ளனர். காஞ்சிபுரம் நகராட்சி தலைவராக சாமிநாதன், சாம்பவ சிவம், சீனுவாசன் ஆகியோர் 2 முறை பதவி வகித்துள்ளனர். அதிமுகவை சேர்ந்த மைதிலி திருநாவுக்கரசு, திமுகவை சேர்ந்த சன் பிராண்ட் ஆறுமுகம், ராஜேந்திரன் ஆகியோரும் காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவராக இருந்துள்ளனர். 

 

 


சுயேச்சை வேட்பாளர் சிவசண்முகம் 


இதுவரை 19 நபர்கள் நகர்மன்றத் தலைவராக இருந்தாலும், அதிமுகவை சேர்ந்த மைதிலி திருநாவுக்கரசு மட்டும்தான் ஒரே பெண் நகர்மன்றத் தலைவராக இருந்துள்ளார். தற்பொழுது காஞ்சிபுரம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக அறிவித்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காஞ்சிபுரம் மாநகராட்சியை முதல் பெண் மேயர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

அதிமுக வேட்பாளர் மர்ம மரணம்

 

கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் மாநகராட்சியில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாமன்ற உறுப்பினராக போரிட கூடிய வேட்பாளர்கள் ஓய்வில்லாமல் பிரச்சாரத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன அவற்றில் 50 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியின் 36-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என, அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்றைய தினத்திலிருந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல் பரப்புரை தீவிரமாக சூடுபிடிக்கத் தொடங்கியது.



 

பிரதான கட்சிகளாக விளங்கும் திமுக , அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை போல், கவர்ச்சிகரமான பிரச்சாரத்தை நகர்மன்றத் தேர்தலில் மேற்கொண்டனர். உதாரணமாக அயன் செய்து கொடுப்பது, பூக்கட்டி கொடுப்பது, ஃப்ரைட் ரைஸ் போடுவது, டீ போடுவது, இறைச்சிக் கடையில் இறைச்சி வெட்டி கொடுப்பது, ஏன் சில வேட்பாளர்கள் வெளியூர் செல்லும் பேருந்தில் ஏறி கூட வாக்குகள் கேட்டனர். 

 

இறுதிக்கட்ட பரப்புரை

 

காஞ்சிபுரம் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்தி, அதிமுக வேட்பாளர் சுமதி ஜீவானந்தம், பாரதிய ஜனதா கட்சி சார்பாக போரிட கூடிய மருத்துவர் பத்மா பிரசாந்தினி, செவிலிமேடு மோகன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த வேட்பாளர் கிரிஜா சூர்யா, ஆகியோர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக வாழ்த்துக்களை சேகரித்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி உறுப்பினர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்கள் உறவினர்களை வேட்பாளர்களாக இறங்கியுள்ளனர். பல பெண் வேட்பாளர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல், முறையில் களம் காண்பதால் வித்தியாசமான முறையில் பிரச்சாரங்கள் அமைந்திருந்தன.

 


 

தங்க காசு

 

இதனிடையே, காஞ்சிபுரம் மாநகராட்சியில் அனுமதி இல்லாமல் கொண்டுவரப்பட்ட பணம் மற்றும் சில பரிசு பொருட்களும் பிடிபட்டனர். பிரதான குற்றச்சாட்டாக, காஞ்சிபுரம் மாநகராட்சி 7வது வார்டில் 10 மில்லி கிராம எடையுள்ள தங்க காசு வாக்காளருக்கு வழங்கப்பட்டதாக புகைப்படத்துடன் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை திமுக வேட்பாளர்கள் தாராளமாக செலவு செய்தனர். அதுவே, அதிமுகவை பொறுத்தவரை வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்கள் மட்டுமே தொடர் பிரச்சாரம் மற்றும் அதிக அளவு செலவு செய்யதனர். பாஜக மற்றும் பாமக வேட்பாளர்கள் சில இடங்களில் தாராளமாகவும், பல இடங்களில் இருக்கும் இடம் தெரியாமலும் இருந்தனர். தேமுதிக ஒரு வேட்பாளரை கூட நிறுத்தவில்லை, அமமுக சார்பில் நிறுத்தப்பட்ட சில வேட்பாளர்கள், பிரச்சாரம் மேற்கொள்ளாமல் மௌனம் சாதித்தனர். 



 

திமுக கூட்டணியில் சலசலப்பு

 

காஞ்சிபுரம் பகுதியில் நெசவாளர்கள் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வரும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து களம் காண்கிறது. மூன்று இடங்களில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.   மக்கள் நீதி மையம் சார்பில் 21 வயதான பவித்ரா என்ற கல்லூரி மாணவி போட்டிருக்கிறார். சுயேச்சை வேட்பாளர்களில் குறிப்பிடும்படியாக 44ஆவது வார்டில் போட்டியிடும் சிவசண்முகம் தனது வித்தியாசமான பிரச்சாரத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த வந்தார். திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் சார்பாக 6 மருத்துவர்கள் வேட்பாளராக களமிறங்கி உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.  

 

படையெடுத்த தலைவர்கள்

 

காஞ்சிபுரம் மாநகராட்சி முதன்முதலாக நடைபெறும் தேர்தல் என்பதால் தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், திமுகவை பொருத்தவரை டி.ஆர்.பாலு, அமைச்சர்கள், பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரை, அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு படையெடுத்து தங்களுடைய வாக்குகளை சேகரித்து வந்தனர்.



 

களைகட்டிய இறுதி நாள் பிரச்சாரம்

 

இறுதி நாளான இன்று ஒவ்வொரு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவருடைய ஆதரவாளர்களும் கட்சி தொண்டர்களும் சுமார் ஆயிரக்கணக்கில், ஒன்று சேர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கும் பேரணியாக சென்று தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.  பிரச்சாரங்கள் ஓய்ந்த நிலையில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது . வருகிற 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. மக்கள் மற்றும் வேட்பாளர்களின் தலை எழுத்தும் அன்று தான் எழுதப்பட்டுள்ளன.