காஞ்சிபுரம் மாநகராட்சியின் 49 வது வார்டில் அதிமுகவின் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான ஜீவானந்தம் மற்றும் அவரது மனைவி சுமதி ஜீவானந்தம் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் . இருவரும் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட 4 வார்டில் சுமதி ஜீவானந்தம், 9வது வார்டில் ஜீவானந்தம் இருவரும் போட்டியிட்டு இருந்தனர். தேர்தலில் இருவரும் தோல்வியை சந்தித்த நிலையில் மீண்டும் தற்பொழுது மாநகராட்சித் தேர்தலிலும் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 49 வார்டு வேட்பாளர் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன், ஜீவானந்தம் மற்றும் சுமந்து ஜீவானந்தம் ஆகியோர் பெயர் வாக்காளர் பட்டியல், 2 இடத்தில் இருக்கிறது என மனு அளித்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்கள் நகர்ப்புற தேர்தலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை. அதேபோல் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் இருவரின் பெயரும் வார்டு 48 இருக்கிறது. எனவே தங்களுடைய மனோ நிராகரிக்கப்படுகிறது என பதிலளித்துள்ளார். இதற்கு மேல் நடவடிக்கை தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் எனவும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் இன்று வேட்புமனு பரிசீலனை போது சற்று பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கப்பட்ட வேட்புமனுக்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள், குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்சியிள் 18 வார்டுகள் என 156 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி கடந்த 28ம் தேதி முதல் 4ந் தேதி வரை மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் திமுக, அதிமுக,பா.ம.க, காங்கிரஸ், பா.ஜ.க,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,நாம் தமிழர், கூட்டணிக்கட்சிகள் உள்ளிட்ட பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இதில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 409 நபர்களும், குன்றத்தூர் நகராட்சியில் 164 நபர்களும்,மாங்காடு நகராட்சியில் 163 நபர்களும், உத்திரமேரூர் பேருராட்சியில் 75 நபர்கள், வாலாஜாபாத் பேருராட்சியில் 84 நபர்கள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகளில் 106 நபர்களும் என மொத்தம் 1001 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் நடைப்பெற்ற வேட்பு மனு பரிசீலனையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 2 நபர்களும், மங்காடு நகராட்சியில் 5 நபர்களும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 5 நபர்களும், வாலாஜாபாத் பேரூராட்சியில் 1 நபரும் என 13 நபர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 156 பதவிகளுக்கு போட்டியிட 988 நபர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கு போட்டியிட ஏற்கப்பட்ட 407 நபர்களின் பட்டியல் மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது.