முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்பு
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இ. ராஜசேகர் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர்
காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மண்ணிவாக்கம் கூட்ரோடு , வண்டலூர் படப்பை சாலை, ஓட்டேரி விரிவு பகுதி , ஊனமாஞ்சேரி, கொளப்பாக்கம் , நெடுங்குன்றம், ரத்தினமங்கலம், வேங்கடமங்கலம், காரணி புதுச்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் காலை முதலே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ராஜசேகருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி , செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா என்கிற கஜேந்திரன் ஆகியோர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதன் ஒரு பகுதியாக நெடுங்குன்றம் பகுதியில், 35 அடி உயர ராட்சச மாலை அணிவித்து அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரோஜா பூ மழை
வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு, பொன்னாடை அணிவிக்கப்பட்டு, பன்னீர் ரோஜா மாலைகள் அணிவிக்கப்பட்டு மேளம் தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திரண்ட அதிமுக தொண்டர்கள் அதிமுக கொடி மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகளை கையில் ஏந்தி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவி ஏற்பாட்டில் செய்யப்பட்டிருந்த வேட்பாளர் வரவேற்பு நிகழ்ச்சியில் , அதிமுக வேட்பாளர் மீது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசையாக கொண்டு வந்த ரோஜா பூக்களை தூவி வரவேற்றனர்.
பிரசுரங்கள் விநியோகித்த பிரச்சாரம்
மேலும் கடை வீதிகளில் நடந்து சென்று வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும், தான் வெற்றி பெற்று வந்தால் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன் , உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து அதிமுக வேட்பாளர் இ. ராஜசேகர் வாக்குகளை சேகரித்தார் .
காஞ்சிபுரம் யாருடைய கோட்டை ?
செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2019 தேர்தல் நிலவரம் எப்படி ?
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.