உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு பிரச்சனை எப்போதும் இருக்கும். யாருக்கு வார்டு ஒதுக்கப்படுகிறது, உட்கட்சியில் யாருக்கு சீட் ஒதுக்கப்படுகிறது, கூட்டணியில் எந்த கட்சிக்கு வார்டு ஒதுக்கப்படுகிறது என எதையெடுத்தாலும் ஒதுக்கீடு பிரச்சனை தான். இப்போது போதாக்குறைக்கு, சிவகங்கை மாவட்டத்தில் வார்டே பிரச்சனையான சம்பவம் நடந்துள்ளது. 




சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 8-வது வார்டடை ஆதிதிராவிடர் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கி உத்தரவிடப்பட்டது.  ஆனால் அந்த வார்டில் ஆதிதிராவிடர் ஒருவர் கூட வாக்காளராக இல்லை என கூறப்படுகிறது. சரியான கணக்கெடுப்பு நடத்தாமல்,  தவறாக வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, அதிகாரிகள் மீது அப்பகுதியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.


இந்நிலையில் தான், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் எதிர்ப்பை மீறி அங்கும் தேர்தல் நடைமுறைக்கு வந்தது. ஆனால், அப்பகுதியினர் ஒன்று கூடி, வாக்காளரே இல்லாத வார்டில், எப்படி ஆதிதிராவிடர் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கலாம் என்று கூறி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். அதன் படி அறிவிப்பும் வெளியிட்டு, வீடுகளிங் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.




பொதுமக்களின் எதிர்ப்பை காரணம் காட்டி, அந்த வார்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் யாரும் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் வேட்புமனுத்தாக்கலும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தான், 8-வது வார்டைச் சேர்ந்த ஒருவரின் முன்மொழிவோடு 9-வது வார்டில் வசிக்கும்  காளியப்பன் என்பவரின் மனைவி மாரி (30) என்பவர் 8 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். 


இதை அறிந்த அந்த வார்டு மக்கள், வேட்பாளர் மாரி மீது கடும் கோபம் கொண்டனர். அது மட்டுமின்றி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யாத நிலையில், இன்று இறுதிநாளில் அவர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவானது. இந்நிலையில், வார்டு மக்களின் எதிர்ப்பால் தனது வேட்புமனுவை மாரி வாபஸ் பெற்றார். 




இதைத் தொடர்ந்து 8 வது வார்டில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரும் வாபஸ் பெற்றதால், மறுதேர்தலை அந்த வார்டு சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாரி, ‛அங்குள்ள மக்கள் விரும்பாத போது, அங்கு வெற்றி பெற்று பயனில்லை என்பதால், அவர்கள் கருத்துக்கு மதிப்பளித்து மனுவை வாபஸ் பெற்றதாக,’ கூறியுள்ளார். அதே நேரத்தில் தங்கள் வார்டை, பொது வார்டாக மாற்றினால் மட்டுமே தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அப்பகுதி மக்கள் உறுதியாக உள்ளனர். இதன் மூலம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ரத்தை சந்திக்கும் முதல் வார்டாக கானாடுகாத்தான் பேரூராட்சி விளங்கப்போகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண