ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கும் சுற்றுப்பயண விவரத்தை வெளியிட்டுள்ளார். 


வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு காந்திசிலை கருங்கல்பாளையம், மாலை 5.30 மணிக்கு சூரம்பட்டி நால்ரோடு, மாலை 6 மணிக்கு சம்பத்நகர், மாலை 6.30 மணிக்கு வீரப்பன் சத்திரம், இரவு 7 மணிக்கு அக்ரஹாரம் பகுதியில் வாக்கு சேகரிக்க உள்ளார். 




ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சார களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.  ஆளும் கட்சி அமைச்சர்கள் தொடங்கி, எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என அனைவரையும் முதலமைச்சர் ஸ்டாலின் இறக்கி விட்டுள்ளார்.   அதேபோல் ஈரோடு அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை என்றாலும், இந்த இடைத்தேர்தலில்   வெல்ல அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரையில் உள்ள பொறுப்பாளர்கள் என அனைவரையும் களமிறக்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 

 

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியால் தேர்தல் களம்  ஒருபுறம் அனல் பறக்க, இவர்களுடன் களத்தில் வாக்குகளை பிரிக்கும் நாம் தமிழர் கட்சியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் இளங்கோவனுக்கு ஆதரவாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஈரோடு கிழக்கில் உள்ள முக்கிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் கமல்ஹாசன். 

 

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக விளங்கினாலும், அதன் ஒரு பகுதியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் அதிமுகவின் வெற்றி என்பது காணல் நீர் தான். அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது,  தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக , பாஜகவுடன் அங்கம் வகிப்பதே என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.  இதனால் தான் பாஜக இந்த இடைத் தேர்தலில் களமிறங்கவில்லை எனவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.  இந்த தொகுதியில் உள்ள 2.27 லட்சம் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் வாக்காளர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் அதிமுகவிற்கு வெற்றி என்பது மிகவும் சவாலானது தான். 

 

ஈரோடு கிழக்கில் அக்ரஹாரம்  எனும் இடம் உள்ளது. அக்ரஹாரம்  என்றால் அனைவருக்கும் பிராமணர்கள் வாழும் பகுதி என எண்ணக்கூடும். ஆனால் ஈரோடு கிழக்கில் உள்ள அக்ரஹாரம்  இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது. 

 

ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் செய்ய உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அஹ்ரகாரத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி இரவு 7 மணிக்கு பிரச்சாரம் செய்யவுள்ளார். கமல்ஹாசன் என்றாலே அவரது பேச்சுக்கு தனி ஈர்ப்பு மக்களிடத்தில் உண்டு. அவர் சந்தித்த இரண்டு தேர்தல்களில் டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்த நிலையில், இம்முறை கை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க உள்ளார் என்பதால் அனைவரது கவனமும் கமலின் பிரச்சாரத்தின் மீது திரும்பியுள்ளது. 

 

ஏற்கனவே 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தனது முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தொகுதி இஸ்லாமியர்கள் அதிகம் இருந்த தொகுதி. அப்போது ”இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே” எனக் கூறியிருந்தார். இவரது இந்த கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில் அவர் தரப்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 19ஆம் தேதி அவர் பிரச்சாரம் செய்ய உள்ள ஈரோடு கிழக்கில் உள்ள அக்ரஹாரத்தில் எப்படி பிரச்சாரம் செய்யவுள்ளார் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது.