எங்கள் மீதும் பொய் குற்றச்சாட்டு கூறினால், நானே ரோட்டில் வந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். தொகுதிக்குள் வராத அளவுக்கு பெரிய பிரச்சினையாகிவிடும் என புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கடுமையாக எச்சரித்தார்.


வேலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி ஆதரித்து குடியாத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது காய்கறி சந்தை மற்றும் உழவர் சந்தை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி செய்தியாளர்களிடம் பேசியபோது, "கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் ஏ.சி.சண்முகம் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதற்கு என் மீதும் கட்சியின் மீதும் பொய்யாக குற்றச்சாட்டை பரப்பி வருகிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் இதோடு பொய் குற்றச்சாட்டு சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நானே ரோட்டில் வந்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். மேலும் தொடர்ந்து அவர் இதே போல் அதிமுகவினர் மீது பொய் குற்றச்சாட்டு கூறினால் அதிமுகவினர் அவர் தொகுதிக்குள் நுழைய முடியாதவாறு பெரிய பிரச்சனை ஏற்பட்டு விடும் என கடுமையாக நான் எச்சரிக்கை விடுக்கிறேன்” என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளிடம் தெரிவித்தார்.