தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 490 பேரூராட்சி என அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் பழனி குமார் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 


சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகள் என மொத்தம் 38 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 699 பதவிகள் உள்ளன. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை சேலம் மாவட்டம் முழுவதும் திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்பட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் என 4 ஆயிரத்து 416 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். சேலம் மாவட்டத்தில் வரும் 19 ஆம் தேதி 1,519 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சேலம் மாநகராட்சியில் 50 சதவீத தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 79 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இறுதி நாளில் ஆயிரத்து 127 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். 



சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் மொத்தம் 783 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 16 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 149 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் வாங்கினார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில் பகுதியில் உள்ள 165 வார்டுகளில் மொத்தம் 971 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 276 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் வாங்கினார். சேலம் மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளில் 474 வார்டுகளில் மொத்தம் 2,662 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 50 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 702 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் வாங்கினார். 



மேலும், மேச்சேரி பேரூராட்சியில் 11 மற்றும் 13 வது வார்டு திமுக வேட்பாளர்களும், கொளத்தூர் பேரூராட்சியில் 4 வது வார்டு திமுக வேட்பாளர் மற்றும் தெடாவூர் பேரூராட்சி 7 வது வார்டு திமுக வேட்பாளரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து வெளியான இறுதி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மாநகராட்சி 60 வார்டுகளுக்கு 618 பேர், 6 நகராட்சிகளில் உள்ள 165 வார்டுகளில் 682 பேர் மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள 470 வார்டுகளில் 1,906 பேர் என மொத்தமுள்ள 695 கவுன்சிலர் பதவிகளுக்கு 3 ஆயிரத்து 206 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.