தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.




கூட்டத்தில் முன்னாள் எம்.பியும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் டி.கே. ரெங்கராஜன் கலந்துகொண்டு பேசுகையில் ,10 பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழகத்தில் இண்டியா கூட்டணி கட்சியின் வெற்றி இந்திய அளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வடமாநிலங்களிலும் பாஜகவுக்கு சரிவு தொடங்கியுள்ளது. அவர்களின் வெற்றி கடந்த காலத்தை விட குறைந்துள்ளது. இண்டியா கூட்டணியை மக்கள் பரவலாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தியாவில் வலதுசாரிகள் பலமாக காலூன்ற கூடிய சூழ்நிலையை நாம் பார்த்துக் கொண்டுள்ளோம். தென்னிந்தியாவில் வலதுசாரிகள் வெற்றி பெற அனுமதித்தது கிடையாது. இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் குரல்கொடுத்த கட்சி திமுக. இந்தத் தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்யக்கூடிய தேர்தல்.




மத்தியில் ஆளும் பாஜக ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறது. இதனை பாஜகவில் உள்ளவர்களும் யோசிக்க வேண்டும். இந்த நாட்டின் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வருவது, நாட்டு மக்களின் உரிமைகளை முற்றிலுமாக அழிப்பது, அப்படிப்பட்ட புதிய சூழ்நிலை நிலவுகிறது. பாஜக என்பது ஒரு பாசிச இயக்கத்தின் அரசியல் பிரிவுதான். அது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போன்று ஒரு கட்சியே அல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து இயக்கங்களை அளிப்பது மூலமாக ஒரு கட்சி ஆட்சியை கொண்டு வருவது ஒரு நாடு ஒரு மதம் என்ற ஆட்சியை கொண்டு வருவது என இவற்றை நோக்கி செல்கிறது. இதற்குப் பின்னணியாக இருப்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தத்துவம். அவர்கள் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டது கிடையாது. மத ரீதியாக இந்த நாட்டின் அரசியல் சட்டங்கள் இருக்க வேண்டும் என வாதிட்டவர்கள். ஆணாதிக்கம் நிறைந்த தத்துவம்தான் ஆர்எஸ்எஸ்.




ஏற்கனவே மாநிலங்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் பரிசீலிக்க வேண்டும். இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சம் என்னவென்றால் தொகுதி வளர்ச்சி, மாநிலங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு, மாநில உரிமைகளைப் மீட்பது என இவைதான் பொருளாக வருகிறபோது எந்த காரணம் கொண்டும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தல் இல்லை. இந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நினைத்து இருந்தால் கச்சத்தீவை மீட்டிருக்க முடியாதா?. அரசு அதிகாரியாக இருந்து தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ளவர் கச்சத்தீவை திமுக தாரை வார்த்துவிட்டது என்கிறார். கச்சத்தீவு விவகாரத்தில் அப்போதே திமுக தலைவர் கருணாநிதி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் என்பது ஆவணங்களில் உள்ளது. அப்போது நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து திமுக உறுப்பினர் இரா.செழியன் கண்டித்து பேசி உள்ளார். அவர் தற்போது உயிருடன் இல்லை. ஆனால் இது குறித்து பேசிய மற்றொருவர் விஐடி விஸ்வநாதன். இவர் அப்போது நாடாளுமன்றத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இவை அனைத்தும் நாடாளுமன்ற பதிவுகளில் இருக்கக்கூடிய விஷயம்.




இதுகுறித்து மோடி பேசினால் எனக்கு கவலை இல்லை. ஆனால் ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர், வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்தவர் இன்னும் அரசு ஆவணங்களை வைத்திருப்பவர் இப்படி திடீரென கூறுவது தான் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.


கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மற்றும் இதர கட்சிகளின் பங்கு என்ன?. எனவே ஜனநாயகத்தை பாதுகாக்க, பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் வெளிப்படையான விஷயம். எனவே, இண்டியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.