I.N.D.I.A Bloc: அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது.


I.N.D.I.A பிரமாண்ட பொதுக்கூட்டம்:


எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A கூட்டணியின் தில்லி பிரமாண்ட பொதுக்கூட்டம், "லோக்தந்த்ரா பச்சாவ் பேரணி" என்ற பெயரில் டெல்லி ராம்லீலா மைதானத்தில்  இன்று நடைபெற உள்ளது. இது ”அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. எந்தவொரு குறிப்பிட்ட நபரையும் அல்ல” என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சரும்,  ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பணமோசடி புகாரில் அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டார். இதையடுத்து, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக,  பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சூழலில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


குவியும் எதிர்க்கட்சி தலைவர்கள்:


டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ்ஐ சேர்ந்த டெரிக் ஓ பிரையன், திமுக எம்.பி.,  திருச்சி சிவா, தேசிய மாநாடு கட்சியைச் சேர்ந்த பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெகபூபா முப்தி, ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் என பல்வேறு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.


காங்கிரஸ் சொல்வது என்ன?


பொதுக்கூட்டம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் காங்கிரசை வரி பயங்கரவாதத்தால் குறிவைப்பது போன்ற பிரச்சினைகளும் பொதுக்கூட்டத்தில் எழுப்பப்படும்.  இந்த பொதுக்கூட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் அரசியலமைப்பைப் பாதுகாப்பதாகும். பாஜக தலைவர்கள் அதை மாற்றி எழுத விரும்புவதால், அது ஆபத்தில் இருக்கிறது" என தெரிவித்தார்.


பலத்த பாதுகாப்பு:


எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்பதை அடுத்து, ராம்லீலா மைதானத்தின் ஒவ்வொரு வாயிலிலும் சோதனை  செய்யப்படுகிறது. துணை ராணுவப் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டிராக்டர்கள் மற்றும் அபாயகரமான ஆயுதங்களை எதையும் கொண்டு வரக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள DDU மார்க்கில் 144 தடை விதிக்கப்பட உள்ளன. பேரணியில் 20,000 பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் அது 30,000 ஐத் தாண்டும் என்று காவல்துறை எதிர்பார்க்கிறது. சிசிடிவி கேமராக்களை நிறுவி, ராம்லீலா மைதானத்தில் நடவடிக்கைகளைக் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை  அமைக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை எச்சரித்துள்ளது.