ஒருவர் எப்படி வாக்கு அளிக்கலாம்?


வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். அந்த பட்டியலிலேயே வாக்குச் சாவடி மையம், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள், தேர்தல் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களைப் பெற முடியும்.


வாக்காளர் தன்னுடைய பெயர் இருக்கிறதா என்பது உள்ளிட்ட விவரங்களை அறிவது எப்படி?


வாக்களிக்க விரும்புவோர் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம். அல்லது 1950 என்ற எண்ணை (எஸ்டிடி கோடு அவசியம்) அழைத்துத் தெரிந்துகொள்ளலாம். அல்லது   ECI என்று டைப் செய்து ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் பதிவிட்டு, 1950-க்கு குறுஞ்செய்தி அனுப்பவும். உதாரணத்துக்கு ECI 12345678 என்று டைப்பிட்டு 1950-க்கு செய்தி அனுப்பலாம்.  Voter Helpline App  செயலியைப் பதிவிறக்கம் செய்தும் அறிந்துகொள்ளலாம்.




வேட்பாளர்களை அறிந்துகொள்வது எப்படி?


உங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர்கள் குறித்து ஏற்கெனவே நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இல்லாவிட்டால், Voter Helpline App  செயலியைப் பயன்படுத்தி அறிந்துகொள்ளலாம். அல்லது https://affidavit.eci.gov.in/ என்ற இணைப்பை பயன்படுத்தியும் வேட்பாளர்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.


நேரடியாகச் சென்று வாக்களிப்பது எப்படி?


* முதல் வாக்குச்சாவடி அதிகாரி, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்ப்பார்.


* இரண்டாவது வாக்குச்சாவடி அதிகாரி, இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்து, ஸ்லிப் கொடுப்பார். அதேபோல Form 17A-ல் கையொப்பம் இடச் சொல்வார்.


* 3ஆவது அதிகாரியிடம் ஸ்லிப்பைக் கொடுத்துவிட்டு, மையிட்ட விரலைக் காண்பித்து வாக்களிக்கலாம்.


* இவிஎம் இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு எதிரில் உள்ள சின்னத்துக்கான பொத்தானை அழுத்தி வாக்களிக்க வேண்டும். வாக்களித்ததும் பீப் என்ற ஒலி தோன்றும். அருகில் உள்ள விவிபாட் இயந்திரத்தில், வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், வேட்பாளர் பெயர், சின்னம் ஆகிய விவரங்கள் 7 விநாடிகளுக்குத் திரையில் தோன்றும்.


* யாருக்குமே அதாவது எந்தக் கட்சி வேட்பாளர்களுக்கும்/ சுயேச்சைகளுக்கும் வாக்களிக்கத் தோன்றவில்லை எனில், நோட்டாவுக்கு வாக்களிக்கலாம். இவிஎம் இயந்திரத்தில் கடைசியாக இந்த பொத்தான் இருக்கும்.


* மொபைல் போன்கள், கேமராக்கள் அல்லது பிற எந்த மின்னணு உபகரணங்களும் வாக்குச்சாவடி மையத்துக்குள் அனுமதி இல்லை.




வாக்களிக்க என்னென்ன ஆவணங்களுக்கு அனுமதி?


வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள், கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்ல வேண்டியது முக்கியம்.


* வாக்காளர் அடையாள அட்டை


* பாஸ்போர்ட்


* ஓட்டுனர் உரிமம்


* மத்திய/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனங்கள்/ பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள்


* வங்கி/ அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள்


* பான் அட்டை


* ரேஷன் ஸ்மார்ட் அட்டை


* MNREGA வேலை அட்டை (மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத அடையாள அட்டை)


* தொழிலாளர் அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை


* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்


* தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை (UDID), இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அடையாள அட்டை


* எம்.பி.க்கள்/ எம்எல்ஏக்கள்/ எம்எல்சிகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்


* ஆதார் அட்டை


வேறு ஏதேனும் கூடுதல் விவரங்களுக்கு: ecisveep.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.