இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 15ஆம் தேதி வெளியிடப்படும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூன் 29ஆம் தேதியும், ஜூலை 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், தேவைப்பட்டால், ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 


ராம்நாத் கோவிந்த் பதவி காலம்


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24, 2022 அன்று முடிவடைகிறது, மேலும் அரசியலமைப்பின் 62 வது பிரிவின்படி, பதவிக் காலம் முடிவடைந்ததால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தலை பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே நடத்தி முடிக்க வேண்டும். பதவிக்காலம் முடிவடைவதற்கு முன் அறுபதாம் நாள் அல்லது அதற்குப் பிறகு தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சட்டம் குறிப்பிடுகிறது. 



அரசியலமைப்பு சட்டம்


அரசியலமைப்பின் பிரிவு 324, குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் சட்டம், 1952, மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் அடிப்படையில், இந்திய குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை இந்திய ஆணையம் பெற்றுள்ளது.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


யார் யார் வாக்களிப்பார்கள்?


இந்திய குடியரசு தலைவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். இவர்கள் 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுகிறார்கள். சில மாநிலங்களில் மேலவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. அதேபோல, மாநிலங்களவை, மக்களவையில் நியமன உறுப்பினர்களுக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்குரிமை கிடையாது.



யார் போட்டியிடலாம்?


குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் இந்திய குடிமகனாக வாக்குரிமை பெற்றவராக இருக்க வேண்டும். அவர் குறைந்தபட்சமாக 35 வயதை அடைந்திருக்க வேண்டும். மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளையும் அவர் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.


போட்டியிடுபவரை தேர்வு செய்யும் முறை


குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட சம்பந்தப்பட்ட வேட்பாளர் நேரடியாகவோ அவரை முன்மொழிபவர், வழிமொழிபவர் மூலமாகவோ வேட்பு மனுவை சமர்ப்பிக்கலாம். ஆனால், அவரது வேட்பு மனுவுடன் அவரை முன்மொழிந்து 50 வாக்காளர்களும், வழிமொழிந்து 50 வாக்காளர்களும் மனுவில் ஆதரவைத் தெரிவித்து கையொப்பமிட்டிருக்க வேண்டும். ஒவ்வோர் வாக்காளரும் தலா ஒரு வேட்பு மனுவை முன்மொழிபவராகவோ வழிமொழிபவராக மட்டுமே தாக்கல் செய்ய முடியும். சம்பந்தப்பட்ட வேட்பாளர் அதிகபட்சமாக நான்கு வேட்பு மனுக்களை வாங்க அனுமதிக்கப்படுவார். வேட்பு மனுவுக்கு முன்னதாக, அவர் ரிசர்வ் வங்கி கரூவூலத்திலோ அரசு கருவூலத்திலோய ரூ. 15 ஆயிரம் பாதுகாப்பு டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும்.



தேர்தல் நடத்துபவர் யார்?


ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் குடியரசு தலைவர் தேர்தலை நடத்துவதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை செகரட்டரி ஜெனரலை தேர்தல் நடத்தும் பொறுப்பு அதிகாரியாக சுழற்சி முறையில் நியமிக்கும். இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் நடத்துகிறார். தமிழ்நாட்டில் இந்த முறை தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் டாக்டர் கே. ஸ்ரீநிவாசன், இணைச் செயலாளர் ஆர். சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் சட்டப்பேரவை செயலாளர் ஆர். முனிசாமி, சட்டப்பேரவை விவாதங்கள் பிரிவு ஆசிரியர் என். அலமேலு ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


வாக்கு மதிப்பு


இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எம்எல்ஏ, எம்.பியின் வாக்கு வங்கி மாறுபடும். மாநிலங்களவை எம்பி, மக்களவை எம்பிக்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. அதே சமயம், மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்எல்ஏக்களின் வாக்குகளின் மதிப்பு மாறுபடும். மாநில மக்கள்தொகையை அந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதன் ஈவை ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் வாக்குகளே அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகளின் மதிப்பாக இருக்கும். அவ்வாறு ஆயிரத்தால் பெருக்கிய பிறகு மீதமுள்ளது ஐநூற்றுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.


இந்தியாவிலேயே அதிக வாக்கு மதிப்பைக் கொண்டது உத்தர பிரதேச மாநிலத்தின் எம்எல்ஏ பதவி. அங்கு ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208 ஆகும். தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176 ஆகும். அந்த வகையில் மாநிலத்தின் மொத்த வாக்கு மதிப்பு 234 x 176 = 41,184



வாக்களிக்கும் இடம்


குடியரசு தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெறும் வாக்காளர்களில் எம்எல்ஏ ஆக இருந்தால் அவர், மாநில சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும். எம்.பி ஆக இருந்தால் அவர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும். மிகவும் அவசரத் தேவை எழுந்தால் மட்டுமே எம்பி ஒருவர் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக முன்னனுமதி பெற்று சட்டப்பேரவை வளாக வாக்குச்சாவடியில் வாக்குரிமையை செலுத்த அனுமதிக்கப்படுவார்.


எண்ணப்படும் இடம்


தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் இடம்பெற்ற பெட்டிகள், பலத்த பாதுகாப்புடன் ஒவ்வோர் மாநிலத்தில் இருந்தும் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு வரப்படும். வாக்கு எண்ணிக்கை நாளன்று, தேர்தல் பொறுப்பு அதிகாரி முன்னிலையில் இந்த வாக்குகள் எண்ணப்படும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.