WB Mamata BJP: மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.


மே.வங்கத்தின் ”தீதி” என்பதை நிரூபித்த மம்தா:


மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறும், மேற்குவங்கத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த ஜுன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது, திரிணாமுல் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு என்பதே கிடையாது எனவே பலரும் கணித்தனர். மோடி அலைவீசும் என பலர் கணிப்புகளை அள்ளி வீசினர். ஆனால், அன்றைய நாளின் முடிவு என்பது மேற்குவங்க மாநிலம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடையே திரும்பி பார்க்க வைத்தது. காரணம் 2019ல் வெறும் 13 இடங்களை வென்ற திரிணாமுல் காங்கிரஸ் இந்த முறை 29 இடங்களை கைப்பற்றியது. அதோடு, கடந்த முறை 18 இடங்களை வென்ற பாஜக, இந்த முறை 12 இடங்களில் மட்டுமே வெற்றி வாகை சூடியது. மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் முழு மூச்சில் பரப்புரை மேற்கொண்டும், மேற்குவங்கத்தில் பாஜக பெற்ற இந்த தோல்வி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதற்கான காரணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


மேற்குவங்கத்தின் ”தீதி” மம்தா


மம்தா பானர்ஜியை மேற்குவங்கத்தின் தீதி என, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறுவது வழக்கம். இந்த வெற்றியின் மூலம் அதனை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார். பல டிஎம்சி தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், மம்தா மீது எந்த ஊழல் கறையும் இதுவரை படியவில்லை. சமூக ஆர்வலராக இருந்த காலத்திலிருந்தே அவர் எளிமையான வாழ்க்கையை பின்பற்றுவதாக கூறப்படுகிறது. வலிமையான தலைவர், புத்திசாலியான அரசியல்வாதி, தொண்டர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யக்கூடியவராக பார்க்கப்படுகிறார். இடதுசாரிகளை எதிர்த்து நின்று,  இளைஞர்களுக்கு அவர் கிளர்ச்சி மற்றும் மாற்றத்தின் சின்னமாக உள்ளார். அதோடு,  சுகாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான அரசு முயற்சிகள் ஆகியவற்றின் மூலமும் தான்,  மம்தா வெற்றியை ஈட்டியதாக கல நிலவரங்கள் தெரிவிக்கின்றன.


பெண்களுக்கான நலத்திட்டங்கள்:


லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தின்படி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்த தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.500 வழங்கப்படுகிறது. 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தொகை முறையே ரூ.1,200 மற்றும் ரூ.1,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது பயிற்சி வகுப்புகளில் VIII-XII வகுப்புகளில் சேரும் 13-18 வயதுடைய தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.25,000 ஒருமுறை மானியம் மற்றும் ரூ.500 ஆண்டு உதவித்தொகையும் உள்ளது. இது குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1, 20,000க்கு மிகாமல் அல்லது அனாதைகள் அல்லது 40% ஊனமுற்ற குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கானது. இதுபோன்ற பெண்களுக்கான நலத்திட்டங்கள் தான், மம்தாவின் வெற்றிக்கு உதவியுள்ளது. அதனை உணர்த்தும் விதமாக தான், மேற்குவங்கத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்களித்ததை, பல கட்ட வாக்குப்பதிவின் போது வெளியான தகவல்கள் காட்டுகின்றன.


சிறுபான்மையினரின் ஆதரவு:


பெண்கள் மம்தாவை ஆதரிக்க ​​சிறுபான்மை வாக்காளர்களும் அவர் பக்கம் திரும்பினர். திரிணாமுல் கங்கிரசின்  அரசாங்கம் சிறுபான்மையினருக்கான பல திட்டங்களைக் கொண்டுள்ளது.  இதில் இமாம் மற்றும் முஸீன் ஆகியோருக்கு கௌரவ ஊதியம், விடுதிகளை நிறுவுவதற்கான நிதி மற்றும் சிறுபான்மை சமூகத்தின் ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்கு உதவித்தொகை ஆகியவை அடங்கும். அவுட்ரீச் 2024 இல் ஈவுத்தொகையும் வழங்கப்பட்டது. அதன் விளைவாக காங்கிரஸ் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி  அவரது சொந்த தொகுதியான பஹரம்பூரில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரான கிரிக்கெட் வீரர் யூசஃப் பதான் வீழ்த்தினார். குஜராத்தைச் சேர்ந்த பதான், டிஎம்சியை பிரதிநிதித்துவப்படுத்தியதால் சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற்றார். 


வெற்றியை ஈட்டிய வெளிநபர்கள்:


யூசஃப் பதான் மட்டுமே மேற்குவங்கத்தில் வெற்றி பெற்ற வெளிமாநில நபர் கிடையாது.   பீகாரைச் சேர்ந்த திரைப்பட நட்சத்திரம் சத்ருகன் சின்ஹா, 2019ம் ஆண்டு இடைத்தேர்தலில் அசன்சோல் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அந்த தொகுதியை மீண்டும் தக்கவைத்துக்கொண்டார். பீகாரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத்  பர்தமான்-துர்காபூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து, வங்காளத்திற்கு வெளியே இருந்தும் 3 வேட்பாளர்களை களமிறக்கி மம்தா வெற்றி பெறச்செய்துள்ளார். இதுவும் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்ற உதவியுள்ளது.