மத்திய அமைச்சரும், ஹிமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூர் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான அனுராக் தாக்கூர், ஹமிர்பூரில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இறங்கி சிக்ஸரை ஸ்டேடியத்திற்கு வெளியே பறக்கவிட்டார். 


ஹிமாச்சல பிரதேசத்தில் நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல்களுடன், 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்தநிலையில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தான் போட்டியிடும் ஹமிர்பூர் மக்களவை தொகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக அந்த தொகுதியில் வலம் வந்தார். அப்போது, ஹமிர்பூர் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஒரு ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அதனை பார்த்து உற்சாகமடைந்த அனுராக் தாக்கூர், தனது கால்களில் பேடு கட்டி களத்தில் இறங்கினார்.






அப்போது, வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வேகமான ஓடிவந்து பந்தினை வீச, எந்தவொரு பயமும் இன்றி இறங்கி அந்த சிக்ஸரை ஸ்ட்ரைட்டாக சிக்ஸருக்கு அனுப்பினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. 


யார் இந்த அனுராக் தாக்கூர்..? 


நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் அனுராக் தாக்கூர் தற்போது ஹிம்மாச்சல பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் போட்டியிடுகிறார். தற்போது இவர் தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை மத்திய அமைச்சராக பதவி வகித்து வருகிறார். 


அனுராக் தாக்கூர் இதுவரை தொடர்ந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 


குடும்ப வாழ்க்கை - தனிப்பட்ட தகவல்: 


அனுராக் தாக்கூர் கடந்த 2002ம் ஆண்டு ஷெபாலி தாக்கூர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள தோபா கல்லூரியில் கலைப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். மேலும், அனுராக் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர், ரஞ்சி கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியுள்ளார். 


 2010-ல் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் இணைந்ததில் இருந்து தொடர்ந்து மூன்று முறை தேசியத் தலைவராக பதவி வகித்த அவர்,   தற்போது மத்திய அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.