ஆந்திராவில் மக்களவை தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடந்து வரும் நிலையில் திரைப்பிரபலங்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 


இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. 7 கட்டங்களாக நாடு முழுவதும் வாக்குப்பதிவானது நடந்து வருகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 26ல் இரண்டாம் கட்டமும், மே 7 ஆம் தேதி 3ஆம் கட்டமும் வாக்குப்பதிவானது நடைபெற்றது. இதனிடையே இன்று 96 தொகுதிகளில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது. இந்த மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் 175 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 


ஆந்திராவை பொறுத்தவரை அங்கு ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி ஆகிய கட்சிகள் இடையே வழக்கம்போல நேரடி போட்டியானது நிலவுகிறது. அதேசமயம் முதலமைச்சர் ஜெகன் மோகனின் சகோதரியான  ஒய்.எஸ். ஷர்மிளா தலைமையில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் இம்முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 






இதனிடையே இன்றைய தினம் ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஜெகன்மோகன், தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இதேபோல் திரைப்பிரபலங்களான இசையமைப்பாளர் கீராவணி, நடிகர்கள் அல்லு அர்ஜூன், சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர்., ஆகியோரும் வாக்களித்தனர். 


இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அல்லு அர்ஜூன், “தயவுசெய்து பொதுமக்கள் தங்கள் வாக்கை செலுத்துங்கள். இது நம் நாட்டின் அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இன்று மிகவும் முக்கியமான நாள். அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிப்பதால், மிகப்பெரிய அளவில் வாக்களிப்பு இருக்கும் என நம்புகிறேன். நான் அரசியல் ரீதியாக எந்தக் கட்சியுடனும் இணைந்து செயல்படவில்லை.  அனைத்துக் கட்சிகளுக்கும் நடுநிலையாக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.