திருச்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திருச்சி வரகனேரி பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது..
‛‛அரசியல் சாசனத்தை மதிக்காமல் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்து வந்தார்கள். தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அ.தி.மு.க வினர் கூறுகின்றனர். தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என கூறியது. கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சார மேடையிலேயே நின்று கொண்டு தி.மு.க தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என பேசுவது என்ன நியாயம்.
கொரோனா நிவாரண நிதி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சினிமாவில் வரும் ஒரு நாள் முதல்வரை போல ஒரே நாளில் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது சினிமாவில் தான் ஒரு நாள் முதலமைச்சரெல்லாம் இருப்பார்கள். நிஜத்தில் அப்படி இருக்க முடியாது. ஐந்தாண்டு கால ஆட்சியில் அரசுக்கு நிதி ஆதாரங்கள் திரட்டி தான் ஒவ்வொரு திட்டங்களை செயல்படுத்த முடியும். நிச்சயம் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அரசுக்கு அதிக அளவிலான நிதி ஆதாரங்கள் கிடைத்தால் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்படாதவையும் தி.மு.க அரசு நிறைவேற்றும். 27 அமாவாசையில் தேர்தல் வரும் என ஈ.பி.எஸ் கிளி ஜோசியம் கூறுகிறார். அவர் அரசியலமைப்பு சட்டத்தை படித்து பார்க்க வேண்டும். ஒரு அரசுக்கு ஐந்தாண்டுகாலம் ஆயுள் காலம் உள்ளது. அரசை யாரும் முடக்க முடியாது.
முன்னாள் முதலமைச்சர்கள் இது போல் பேசுவது தவறு. தி.மு.க அரசு ஐந்தாண்டுகள் நிச்சயம் முழுமையாக இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற பா.ஜ.க வின் குரலை தான் அ.தி.மு.க தற்போது பேசுகிறது. இது விஷமான பேச்சு.தமிழ்நாட்டில் பா.ஜ.க வின் பிரித்தாளும் சூழ்ச்சி எப்போதும் எடுபடாது.ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி என்பது சர்வாதிகாரத்தில் தான் போய் முடியும். இது குறித்து மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,’’ என கூறினார்.இந்த பிரச்சார கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி 31 வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுஜாதா, தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்