மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையை நிரூபிக்கும் என உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவும், கட்சிக்காகவும் தங்களது சொந்த குடும்பத்தை சேர்ந்தவர்களையே எதிர்க்கும் சூழல் நிலவும். அந்த வகையில் 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது ஒரே அணியில் இருந்த மூன்று முக்கிய வீரர்கள் தற்போது வெவ்வேறு மூன்று கட்சிகளில் இருக்கின்றனர். எதிர்த்து நிற்கின்றனர் அவர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம். 


கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10, 2024) மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தல் 2024 இல் திரிணாமுல் காங்கிரஸின் (டிஎம்சி) 42 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த டிஎம்சியின் பட்டியலில் நட்சத்திர வேட்பாளர்களுடன், புதிய முகங்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது. அவர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானின் பெயரும் உள்ளது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கட்சி சார்பில் பஹரம்பூர் தொகுதியில் யூசுப் பதான் நிறுத்தப்பட்டுள்ளார். இதன்மூலம், அரசியலில் புதிதாக அறிமுகமாகும் யூசுப் பதான்  மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் இல்லை. வேறு ஒரு மாநிலத்தில் இருந்து இந்த பட்டியலில் உள்ள ஒரே வேட்பாளர் இவர்தான். 


காங்கிரஸின் கோட்டைக்குள் டிஎம்சி..? 


காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் பஹரம்பூர் தொகுதியில் யூசப் பதான் களமிறக்கப்பட்டுள்ளார். தற்போது, ​​இந்த தொகுதியின் எம்.பியும் காங்கிரஸ் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிடுவார் என தெரிகிறது.  ஆதிர் சவுத்ரிதான் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் மேலிடம் இதுவரை அறிவிக்கவில்லை. ஒருவேளை அப்படி போட்டியிட்டால், யூசுப் பதானின் அரசியல் ஆடுகளம் அவ்வளவு சுலபமாக இருக்காது. மேலும், ஆதிர் சவுத்ரி இதே பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 






குஜராத்தைச் சேர்ந்த யூசுப் பதான் வங்கதேசத்தில் போட்டி: 


குஜராத்தின் பரோடாவில் பிறந்த யூசுப் பதான், கிரிக்கெட் களத்தில் ஒரு ஆக்ரோஷமான ஆல்-ரவுண்டர் ஆவார்.  கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடிய இவர், கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார். 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற அணியிலும் ஒரு அங்கமாக இருந்தார். இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அரசியல் களத்தில் இறங்கிய பிறகு, யூசுப் பதான் தனது முன்னாள் அணி வீரர்கள் இருவரை எதிர்கொள்வார்.


யூசுப் பதானுக்கு முன், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 2022ம் ஆண்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் (ஏஏபி) சேர்ந்தார். தற்போது, ​​இவர் நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவில் இருந்து கட்சியின் எம்.பி.யாக உள்ளார். இதேபோல், முன்னாள் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கௌதம் கம்பீர் மார்ச் 2019 இல் பாஜகவில் சேர்ந்தார். தற்போது இவர் மக்களவை எம்.பி.,யாக உள்ளார். கௌதம் கம்பீர், ஹர்பஜன் சிங் மற்றும் யூசுப் பதான் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஒரே அணியில் இடம்பிடித்துள்ளனர். மக்களவை தேர்தலுக்கு முன், பிஜேபி, ஆம் ஆத்மி மற்றும் டிஎம்சி இந்த மூன்று கட்சிகள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை அரசியல்வாதிகளாக களம் இறக்குகிறது. 


எந்தெந்த கிரிக்கெட் வீரர்கள் எந்த கட்சிகளில் உள்ளனர்..? 


கம்பீர், ஹர்பஜன் சிங் மற்றும் யூசுப் பதான் தவிர, இதுவரை பல கிரிக்கெட் வீரர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். இதில் கீர்த்தி ஆசாத் (டிஎம்சி), முகமது அசாருதீன் (காங்கிரஸ்), நவ்ஜோத் சிங் சித்து (காங்கிரஸ்), மனோஜ் திவாரி (டிஎம்சி), சேத்தன் சவுகான் (பாஜக), ஸ்ரீசாந்த் (பாஜக), அசோக் திண்டா (பாஜக), முகமது கைஃப் (காங்கிரஸ்), மன்சூர் அலி கான் பட்டோடி (விஷால் ஹரியானா கட்சி) மற்றும் வினோத் காம்ப்லி (லோக் பாரதி கட்சி) உள்ளிட்டோர் அரசியல் கட்சிகள் உள்ளனர். அதேபோல், கடந்த 1983 உலகக் கோப்பை வென்ற கீர்த்தி ஆசாத்துக்கும் இந்த முறை டிஎம்சி கட்சி சார்பில் பர்தாமான்-துர்காபூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.