பவர்ஃபுல் துறையின் பவரான அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியின் வாழ்க்கையை ஒரு பழைய வழக்கு புரட்டி போட்டுவிட்டது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக சொல்லி பண மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அவர், 239 நாட்களாக சிறையில் இருக்கிறார்.


'இன்னும் கிடைக்காத ஜாமீன், விரக்தியில் SB'


உடனே வெளியே வந்துவிடுவார், ஜாமீன் கிடைத்துவிடும் என்று சொல்லப்பட்டதெல்லாம் செந்தில் பாலாஜி வழக்கில் பொய்யாகின. மீண்டும், மீண்டும் என்பது மாதிரி அவரது நீதிமன்ற காவல் 25 முறை நீட்டிக்கப்பட்டிருகிறது. இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் 26வது முறையாக நீட்டிக்கப்படவிருக்கிறது.


கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுகவிடம் பறிகொடுத்தது. அதற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக சக்கரபாணியை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, செந்தில்பாலாஜியை கோவையின் பொறுப்பு அமைச்சர் ஆக்கினார் முதல்வர் ஸ்டாலின். சிறிது நாட்களிலேயே உள்ளாட்சி தேர்தல் வந்தது, சுற்றி சுழன்று வேலை செய்தார் செந்தில்பாலாஜி, நள்ளிரவு 1 மணிக்கெல்லாம் நிர்வாகிகளுக்கு போன் செய்து தகவல் கேட்பார் என அலறினர் கோவை மாவட்ட உடன்பிறப்புகள். அவர் செய்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. 


சிம்ம சொப்பனமாக திகழ்ந்த செந்தில்பாலாஜி


அதிமுக கோட்டை என்று கொக்கரித்துக்கொண்டிருந்தவர்களுக்கு செந்தில்பாலாஜி சிம்ம சொப்பனமாக தெரிந்தார். அதன்பிறகு ஆட்சியிலும் கட்சியிலும் அவரது செல்வாக்கு எகிறியது. ஸ்டாலினுக்கு எல்லாமும் அவர்தான் என சீனியர்களே பேசத் தொடங்கினர். முதல்வர் வீட்டில் கூடும் நிர்வாகிகள் கூட்டத்தை தாண்டி செந்தில்பாலாஜி வீட்டில் எப்போதும் அதிக கூட்டம் இருந்தது. ஆனால், அதுவே அவருக்கு தலைவலியாக மாறத் தொடங்கியது.


செந்தில்பாலாஜியின் செயல்பாடுகளால் திமுகவின் முன்னத்தி ஏர்கள் முகம்சுளிக்க தொடங்கின. அப்போதுதான் அலேக்காக வந்து, அவர் வீட்டிற்குள் பாய்ந்தது அமலாக்கத்துறை. காலையில் வாக்கிங் போய்விட்டு வந்தவரை இரவில் ஸ்டெச்சரில் கொண்டு செல்லும் அளவிற்கு விசாரணை தீவிரம் அடைந்தது. வாக்கிங் சென்ற உடையை கூட மாற்றவிடாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்த விசாரணையில் அவருக்கு நெஞ்சுவலியே வந்தது. மற்ற அரசியல்வாதிகள் மாதிரி இவரும் நடிக்கிறார் என்று நினைத்தனர் அதிகாரிகள். இருந்தாலும் அவரை காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து அனுமதித்தனர். அன்று அவர் கதறிய காட்சிகள் எல்லா ஊடகங்களிலும் பெரிதாக வெளிவந்தன.


வாழ்க்கை என்பது ஒரு வட்டம்


ஒரு ராஜா போல இருந்தவர் ஒரே நாளில் உடைந்துப்போனார். விஜய் சொல்வது மாதிரிதான். வாழ்க்கை ஒரு வட்டம், இங்கு ஜெயிக்கிறவன், தோற்பான், தோற்கிறவன் ஜெயிப்பான். அப்படிதான் செந்தில்பாலாஜிக்கும் நடந்தது. எல்லாவற்றிலும் முன்னெச்சரிக்கையாக இருப்பவர், பழைய வழக்கை பாலீதின் பையில் முடிந்து போட்டுவிட்டார்.  அன்று, அவருக்கு செய்த பரிசோதனையில் ரத்த குழாயில் அடைப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஓமாந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இருந்து நீதிமன்ற அனுமதி பெற்று காவிரி மருத்துவமனைக்கு கூட்டி வந்து அறுவகை சிகிச்சை செய்தனர். முதல்வர் ஸ்டாலினே நேரடியாக சென்று நலம் விசாரித்தார். உதயநிதி, அமைச்சர்கள் என ஒரு பெரிய பட்டாளமே கைது செய்யப்பட்டவருக்கு ஆதரவாக இருந்தது. கட்சி உங்களுக்கு பக்கபலமாக நிற்கும் எதற்கும் கவலைப்படாதீர்கள் என்று ஆற்றுப்படுத்தினர் நிர்வாகிகள்.


ஆனால், சிலருக்கு உள்ளூர வேற எண்ணம் இருந்தது. ஆடிய ஆட்டத்திற்கு இது உனக்கு வேண்டும் என்று நினைத்துக்கொண்டனர். ஆனால், யாரும் அதை வெளியில் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. ஜூன் 15ஆம் தேதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு 21ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 34 நாட்களுக்கு பிறகு ஜூலை 18ஆம் தேதி செந்தில்பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


ஜாமீன் பெற போராட்டம் நடத்தும் SB


அன்று முதல் இன்று வரை சர்வ வல்லமை படைத்தவர் என்ற சொல்லப்பட்ட செந்தில்பாலாஜியால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முடியவில்லை. நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு மண்டலத்தில் செந்தில்பாலாஜிக்கு பதில் நேரடியாக உதயநிதியே களம் இறங்கவுள்ளார். கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் தொகுதிகளை இந்த முறையும் கைப்பற்றிவிட  வேண்டும் என்று கங்கனம் கட்டி இறங்கியிருக்கிறது திமுக.


செந்தில் பாலாஜி இல்லாதது ஆதரவாளர்களுக்கு இழப்பு


ஆனால், செந்தில்பாலாஜி இந்த நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இல்லாதது அவரது ஆதரவாளர்களுக்கும் அவர் சீட்டு வாங்கிக் கொடுப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கும் இழப்புதான். எப்போது அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று தெரியவில்லை. ஆனால், அசராமல் திமுக சட்டத்துறையும் அவரது தனிப்பட்ட வழக்கறிஞர்களும் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இன்னும் கூட அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அவரது தம்பி அசோக் ஆஜராகவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதை கூட அமலாக்கத்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.


அசோக்கை தேடும் அமலாக்கத்துறை


அசோக் ஆஜராகாத நிலையில், செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது குதிரை கொம்பாகதான் இருக்கும். இன்னும் 126 நாட்கள் செந்தில்பாலாஜி சிறையில் இருந்தால், ரவுண்டாக ஒரு வருடமாக ஆகிவிடும். அதற்குள் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.