கரூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கரூர் - கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். 




அப்போது உரையாற்றிய அவர்:


திமுக அரசு இந்த தேர்தலை தடுத்து நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தது. உச்சநீதிமன்ற ஆணையின் காரணமாக வேறு வழியின்றி தேர்தலை நடத்துகிறது. அடுத்த தேர்தலில் செந்தில்பாலாஜி எந்த கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை. அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை போன்றது. எம்.ஜி.ஆர்,  ”திமுக தீய சக்தி. அதை ஒழிப்பதே நம் வேலை என்று சொன்னவர். ஆனால், அதிமுகவில் இருந்து 8 அமைச்சர்கள் திமுகவிற்கு போயுள்ளனர். பணத்தை வைத்து எது வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இந்தியா டுடே நிறுவனம் சட்டம் ஒழுங்கில் சிறந்த முதல்வர் என்ற விருதை எனக்கு கொடுத்தது. இன்று காவல் துறை திமுக அரசின் கைப்பாவையாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்கள் வாக்களிப்பவரே ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். செந்தில் பாலாஜி ஜனநாயம் இல்லாமல் பணத்தை கொடுத்து ஒவ்வொருவரையும் விலைக்கு வாங்கி வருகிறார். இந்தப் பிழைப்பு தேவையா? 




நேரடியாக அரசியல் ரீதியாக மோதிப் பார்க்க வேண்டும். மிரட்டல் விடுத்து திமுகவிற்கும் ஒவ்வொருவரையும் இழுத்து வருகின்றனர். ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக பேசப்பட்ட தமிழ்நாடு காவல்துறை இன்று இல்லை. 2024 ஒரே நாடு ஒரே தேர்தல் வர உள்ளது. இன்னும் 27 அமாவாசைதான் உள்ளது. ஆட்சி மாறும்போது காட்சிகள் மாறும். 30 ஆண்டுகாலம் பல சோதனைகளை கடந்து அதிமுக ஆட்சியில் இருந்தது. முதல்வராவதும், அமைச்சராவதும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்குதான். இவர்கள் கொள்ளை அடிக்க வருகிறார்கள். இந்த ஊர் அமைச்சர் கொள்ளை அடிக்க திட்டம் போட்டு கொடுக்கிறார். செந்தில்பாலாஜி மீது கத்தி தொங்கிக்கொண்டுள்ளது. சேலத்திற்கு வந்தார். ஒன்றும் வேலை நடக்கவில்லை. இப்போது கோவையில் சென்று வேலை செய்து வருகிறார். இன்னும் கொஞ்ச நாள்தான் அமைச்சராக இருப்பார். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் என்று திமுக வாரிசு அரசியல் நடத்துகிறது. இப்போது உதயநிதி வந்துள்ளார். அதிமுக தொண்டர்கள் கடைசிவரை உறுதியுடன் இருப்பர்.


சாதாரண தொண்டன் கூட இங்கு முதல்வராகலாம். திமுக அரசை தூக்கி பிடிப்பது ஊடகம்தான். கரூர் மாவட்டத்திற்கு இந்த அரசு 9 மாதமாக ஒன்றும் செய்யவில்லை.



ஸ்டாலின் ஈசிஆர்-ல் சைக்கிளில் போகிறார். டீ குடிக்கிறார். போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக. முதன்மை முதலமைச்சர் என்று இவரே சொல்கிறார். பொய் பேசுவதில்தான் நம்பர் 1-ஆக இருக்கிறார். நாட்டு மக்களுக்கு பல பிரச்சினை உள்ளது. ஆனால், ஸ்டாலின் விளம்பர பிரியராக உள்ளார். 2021 தேர்தலில் 501 அறிவிப்பு வெளியிட்டார். சில காரியங்களை மட்டுமே செய்துள்ளனர். பல அறிவிப்புகளுக்கு தீர்வில்லை. கரூரில் உதயநிதியிடம் பெண்கள் 1000 ரூபாய் உரிமைத்தொகை எங்கு என்ற கேள்விக்கு இன்னும் 4 வருடம் உள்ளது என்று பேசினார். நாமம்தான் மிஞ்சும்.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


இந்த தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்டுங்கள். நான் கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் கரூரில் 6 பேர் மருத்துவராக உள்ளனர். இதுவரை 541 ஏழை மாணவர்கள் இந்த திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர் என்று பேசினார்.  தொடர்ந்து, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.