காஞ்சிபுரம் மாநகராட்சித் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 32 வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் மேயர் பதவியை 6 பெண் வார்டு உறுப்பினர்கள் கேட்டு வந்தனர். இதற்காக கட்சியின் முக்கிய பிரமுகர்களையும், வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களையும் இவர்களது ஆதரவாளர்கள் சந்தித்து ஆதரவு திரட்டினர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அந்த வார்டில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 31 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 32 வார்டுகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக ஒரு வார்டிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.



காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் 17 பெண்கள் மாநகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 6 பேருக்கு மாநகராட்சி மேயர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வந்தது இந்நிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள யுவராஜின் மனைவி மகாலட்சுமி திமுகவின் மேயர் வேட்பாளராக தலைமை கழகம்  அறிவித்துள்ளது . மேற்படி மகாலட்சுமி இன்போசிஸ் மென் பொறியாளர் ஆக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் அரசியலில் இறங்கி மக்கள் சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தன் பணிபுரிந்த நிறுவனத்தில், இருந்து தன் பதவியை விட்டு வெளியேறி தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.



இதேபோல் துணைமேயர் திமுகவிற்கு தான் வழங்கப்படுமென அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், தலைமை கழகம் துணைமேயர் பதவியை காங்கிரஸிற்கு தாரை வார்த்து உள்ளது. காஞ்சிபுரத்தில்  22ஆவது வார்டில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட குமரகுரு நாதன் என்பவர் வெற்றி பெற்றார். இவர் காஞ்சிபுரத்தில்  உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.  திமுகவில் 32 வார்டு உறுப்பினர் வெற்றிபெற்றுள்ள நிலையில், காங்கிரஸில் மேற்கண்ட நபர் ஒருவர் மட்டுமே தான் வெற்றி பெற்றிருக்கிறார்.



 

இருப்பினும் துணை மேயர் பதவி திமுக தலைமைக்கழகம் காங்கிரசுக்கு ஒதுக்கி இருப்பது அனைவரையும் உறைய வைத்துள்ளது. மேயர் பதவி பெண் என்பதால் துணை மேயர் பதவி அதிகாரம் செலுத்தும் பதவியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதால் 10க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டது காரணமாக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.