இந்தியாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் உத்தரப் பிரதேசத்தில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில், அங்கு பாஜக பெரிய வெற்றியை பதிவு செய்தது.
பாஜகவின் கோட்டை உத்தரப் பிரதேசம்: கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 71 இடங்களை பாஜக கைப்பற்றியது. 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 62 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த மக்களவை தேர்தல் தற்போது நிறைவுபெற்ற நிலையில், பல்வேறு நிறுவனங்கள் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் 62 முதல் 66 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பிகார், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளை பாஜக வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சி தந்த கருத்துக்கணிப்பு: பிகாரில் 34 முதல் 38 தொகுதிகளிலும் ஜார்க்கண்டில் 11 முதல் 13 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல, கர்நாடகாவில் 23 முதல் 25 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றுபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அடங்கிய இந்தியா கூட்டணி 15 முதல் 17 வெற்ற பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி 3 முதல் 5 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில் 1 முதல் 3 தொகுதிகளிலும் கர்நாடகாவில் 3 முதல் 5 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் 7 முதல் 9 தொகுதிகளிலும் பாஜக 7 முதல் 9 தொகுதிகளிலும் ஏஐஎம்ஐஎம் ஒரு தொகுதியில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, 353 முதல் 383 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மட்டும் 315 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையைவிட இந்த முறை அதிக தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு கடும் போட்டி அளித்த இந்தியா கூட்டணி 152 முதல் 182 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி 74 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.