கேள்வி : போதைப்பொருள் விவகாரத்தை அதிமுக பெரியளவில் கையில் எடுக்க என்ன காரணம்?
பதில் : “மனித உடலில் புற்றுநோய் வந்தால் எப்படி பாதிக்குமோ, அதேபோல நாட்டிற்கு பிடித்த புற்றுநோயாக இந்த போதை விவகாரத்தை பார்க்கிறோம். இது நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ளது. திமுக ஆட்சியில் தெருவெல்லாம் கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறது. இது மற்ற விவகாரங்கள் போல இல்லை. மாபியா கும்பல் தமிழ்நாட்டிற்குள் இயங்கி வந்துள்ளது. ஜாபர் சாதிக் முதலமைச்சர் குடும்பத்துடன் பொருளாதார தொடர்பு வைத்திருந்ததைச் சாதாரணமாக கடந்து போக முடியாது. இதற்கு தீர்வு காண வேண்டுமென அதிமுக தீவிரமாக பணி செய்கிறது”
கேள்வி : தேர்தலுக்காக போதைப்பொருள் விவகாரத்தை அதிமுக பெரிதுபடுத்துகிறதா?
பதில் : “இது திமுகவே பரப்பி விடும் பிரச்சாரம். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர், டெல்லி காவல் துறையினர் உடன் இணைந்து போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளார்கள். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், இங்கு தேர்தல் நடக்கிறது என வந்தார்களா? அறிவும், புரிதலும் இல்லாமல் அடிப்படை இல்லாத வாதங்களை முன்வைக்கிறார்கள். ஜாபர் சாதிக் கைது செய்த பிறகே, இந்த பிரச்சனை இருப்பது தெரியவந்தது. விடை சொல்ல முடியாமல் திமுக திசை திருப்பப் பார்க்கிறது”
கேள்வி : குட்கா விவகாரத்தில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யாதவர்கள் உத்தமர் போல பேசுகிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : “முதலமைச்சர் எழுதி தருவதை பேசுகிறார். குட்கா விவகாரம் என்பது எதிர்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டு. ஆனால் குற்றவாளி என்பதால் தான் ஜாபர் சாதிக்கை திமுக கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. கையும் களவுமாக மாட்டியுள்ள திமுக தான் பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். இந்த பிரச்சனைக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்”
கேள்வி : அதிமுகவினால் வலுவான கூட்டணி அமைக்க முடியவில்லையா?
பதில் : வலுவான கூட்டணி அமையவில்லை எனில், தனித்தே 40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். 2014 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக வந்தது. திமுக தனித்து நின்றதாக வரலாறு இல்லை. தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக உள்ள அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நல்ல கூட்டணி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக கூட்டணியில் கட்சிகள் உள்ளன. ஆனால் அந்த கட்சிகளுக்கு ஓட்டு உள்ளதா? சிபிஐ, சிபிஎம், மதிமுகவிற்கு என்ன வாக்கு வங்கி உள்ளது? காங்கிரஸ் மிரட்டலுக்குப் பயந்து திமுக சரணாகதி அடைந்தது போல பாஜக உடன் அதிமுக கூட்டணிக்கு செல்வார்கள். அதை வைத்தே பிரச்சாரம் செய்யலாம் என திமுக நினைத்தது.
ஆனால் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் எங்கள் பொதுச்செயலாளர் உறுதியாக உள்ளார். அதனால் ஏற்பட்ட அச்சம், பதட்டத்தில் சீக்கிரம் தொகுதி பங்கீட்டை முடித்து வேலை செய்கிறார்கள். திமுக கூட்டணியினர் 40 தொகுதிகளில் செய்த வேலை என்ன? மின்கட்டணம், சொத்து வரி, பால் விலை என சகல பொருட்கள் விலையும் ஏறியுள்ளது. கூட்டணி பற்றிக் கவலைப்பட தேவையில்லை. பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவிற்கு ஏற்ப களத்தில் வேலை செய்யத் தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்.
கேள்வி : அதிமுக - பாஜக உடன் கள்ள கூட்டணி வைத்துள்ளதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளாரே?
பதில் : முதலமைச்சர் பதவிக்கு துளிகூட தகுதியற்றவர் ஸ்டாலின். அவரது தரம் இவ்வளவு தான் என்பது போல பேச்சு இருந்தது. அதிமுக பாஜக உடன் கூட்டணியில் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திமுக சரணாகதி அடைந்தது போலில்லாமல், கூட்டணியில் இருந்த போதே மாநில நலன் கருதி எதிர்க்க வேண்டிய இடத்தில் பாஜகவை எதிர்த்துள்ளோம். அதிமுக பாஜக உடன் கூட்டணியில் இருந்த போது தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். புதிய கல்வி கொள்கை மற்றும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அப்புறம் எப்படி கள்ளக்கூட்டணி என்கிறார்?
சிஏஏ சட்டம் அதிமுக வாக்களித்ததால் தான் நிறைவேறியது என்பது பச்சை பொய். ராஜ்யசபாவில் வாக்கெடுப்பின்போது அதிமுக எதிர்த்து வாக்களித்து இருந்தாலும், அச்சட்டம் நிறைவேறி இருக்கும். வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாட்டு அகதிகள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என ஆதரவாக பேசினோம். தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு ஒரு பாதிப்பும் வராது என எடப்பாடியார் சொன்னார். பாஜக மக்களிடம் அச்சத்தை உருவாக்கி விட்டது”
கேள்வி : கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பெரிய வெற்றி கிடைக்காது என கருத்துக் கணிப்புகள் வந்தது. 2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்காது எனவும், 2021 ல் அதிமுக 10 தொகுதிக்குள் அடங்கி விடும் எனவும் கருத்துக் கணிப்புகள் வந்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் கருத்து கணிப்புகளுக்கு மாறாக இருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். திமுகவின் மிக மோசமான ஆட்சியையும், மக்கள் விரோத நடவடிக்கைகளை சொல்லி வாக்கு கேட்போம். கருத்துக் கணிப்புகளை நாங்கள் மனதில் எடுத்துக் கொள்ளவில்லை.
கேள்வி : அதிமுக உடன் மற்ற கட்சிகள் கூட்டணி சேர விடாமல் பாஜக தடுக்கிறதா?
பதில் : ”பாஜகவினர் கூட்டணி அமைக்க வேலை செய்கிறார்கள். அதைப்பற்றி கவலையில்லை. திமுகவை எதிர்ப்பது போல பூச்சாண்டி காட்டி விட்டு, அதிமுகவில் துரோகிகளை வளர்த்து அழிக்க வேண்டும் என பாஜக வேலை செய்வதாக சில காலமாக சொல்லி வந்தார்கள். அதை பாஜக நிரூபித்து வருகிறது”