ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடப்போவதாக உறுதியான தகவல் நமக்கு கிடைத்துள்ளது. எனவே, எக்ஸ்குளூசிவ் செய்தியாக இதைப் பதிவு செய்கிறோம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் MLA-வாக இருந்தவர் திருமகன் ஈவேரா. அண்மையில் மாரடைப்பு காரணமாக திடீரென காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தலை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அடுத்த மாதம் பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தச்சூழலில், திருமகனின் தந்தையும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனே, அந்தத்தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இடைத்தேர்தலை பொறுத்தமட்டில், மறைந்த திருமகனின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனோ அல்லது திருமகனின் மனைவி பூர்ணிமாவோ போட்டியிடுவதாக இருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு அந்தத் தொகுதியை ஒதுக்குவது என்றும் அவர்கள் போட்டியிடவில்லை என்றால், திமுக-வே நேரடியாக களமிறங்கலாம் என்றும் திமுக தலைமையகம் தீர்மானித்திருந்தது. அதற்கேற்ப ஈரோடு திமுக-வினரும் தேர்தல் பணிக்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தமிழக காங்கிரஸும் ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில்தான், இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. இரண்டு நாட்களில் தமது முடிவைத் தெரிவிப்பதாக ஈவிகேஎஸ் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ABP நாடு-விற்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட முடிவு செய்திருப்பதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது. இதை காங்கிரஸ் மற்றும் திமுக-வில் உள்ள அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் உறுதி செய்திருக்கிறார் ஈவிகேஎஸ். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று அல்லது நாளை அவர் வெளியிடுவார் எனத் தெரிகிறது. அதற்கு முன்னரே, நமக்குக் கிடைத்த உறுதியான தகவலை அடுத்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்ற செய்தியை தற்போது பதிவு செய்கிறோம்.
ஈவிகேஎஸ் இளங்கோவனை பொறுத்தமட்டில், 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியின் MLA-வாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, கோபி செட்டிப்பாளையும் MP-ஆகவும் இருந்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் தற்போது இருக்கும் ஈவிகேஎஸ், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 74 வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவன், மீண்டும் சட்டமன்ற தேர்தலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதன் மூலம் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணி வேட்பாளர் யார்?
கடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் அங்கு தமாகா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த யுவ்ராஜ், இம்முறையும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த முறை, இரட்டை இலை சின்னத்தில்தான் தமாகா வேட்பாளர் போட்டியிட்டார் என்பதால், இம்முறை அதிமுக வேட்பாளரையே நேரடியாக களம் இறக்கினால் தான், வெற்றிப் பெற முடியும் என எடப்பாடி பழனிச்சாமி கருதுவதாகத் தெரிகிறது. மேலும், தற்போது அதிமுக தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், ஓபிஎஸ் மூலம் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமோ என்ற அச்சமும் எடப்பாடியார் தரப்பில் நிலவுகிறது. இதனால், எதிர்க்கட்சிகள் தரப்பில் அங்கு போட்டியிடுவது யார் என்பதில் குழப்பம் காணப்படுகிறது. ஆனால், கூட்டணி தர்மத்தின்படி, தங்களுக்கே ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புத் தர வேண்டும் என ஜி.கே. வாசன் உறுதியாகக் கேட்டு வருகிறார். இது தொடர்பாக, அதிமுக முன்னணி தலைவர்கள், ஜிகே வாசனைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள்.
தனித்து களமிறங்க பாஜக திட்டம்:
உள்ளாட்சித்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது போல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட பாஜக திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அக் கட்சியின் சார்பில், முருகானந்தம், வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. அதற்கேற்ப, தற்போதே, தேர்தல் பணிக்குழு அமைத்து, அக் கட்சித் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணைய அறிவிப்பு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு, அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தச்சூழலில், இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி முழுவதும் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. அதேபோல், அனைத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனேயே நடைமுறைக்கு வந்தன என்று இந்தியதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.