Crime : கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் நடுரோட்டில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, பெண்ணுக்கு தெரிந்த நபர்களாலேயேதான் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக,  கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.


கல்லூரி மாணவி கொலை


கர்நாடக மாநிலம் பெங்களூரு சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ராஷி(19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரி சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இரண்டு பேர் இளம்பெண் முன்பு வழிமறித்து நின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இது குறித்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கொலையின் பின்னணியில் காதல் விவகாரம் உள்ளதா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 


இதுகுறித்து, பெங்களூரு  காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுனா பாலதாண்டி கூறுகையில், ”ராஷியின் தொண்டையில் கத்தியால் குத்திவிட்டு குற்றவாளி தப்பியோடிவிட்டார். குற்றவாளிகள பிடிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி குற்றவாளியில் ஒருவரை, அந்த பெண்ணுக்கு தெரியும். அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டாலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது''  என்று தெரிவித்தார்.



மற்றொரு சம்பவம்

 

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் குகனூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் பஜந்திரி (19). இவர் பலகேரி பகுதியில் வசித்து வரும் சுமா என்ற 18 வயதுடைய பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருமே கல்லூரியில் படித்து வருகின்றனர்.  பிரகாஷ் பஜந்திரி, சுமாவிடன் தனது காதலை தெரிவித்துள்ளார். வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அவரை காதலித்தால் பிரச்சனை வரும் என்று நினைத்து, காதலனை ஏற்க மறுத்துள்ளார்.


இதனை அடுத்து, சுமா வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த பிரகாஷ், அவரது வீட்டிற்கு வந்துள்ளளார். பின்னர், சுமாவின் வீட்டிற்குள் புகுந்த பிரகாஷ், மீண்டும் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். காதலை ஏற்க மறுத்த சுமா, தன்னை தொல்லை செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரகாஷ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சுமாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சுமா உயிரிழந்துள்ளார். பின்னர் அந்த இளைஞரும் கத்தியால் தன்னை தானே குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.