ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க.-வைச் சேர்ந்த நிர்வாகி காஞ்சனா தன் கை குழந்தையுடன் வாக்கு சேகரித்துள்ளார். கோவையைச் சேர்ந்த காஞ்சனா குழந்தையுடன் சென்று வாக்கு சேகரித்தது மக்களிடையே நெகிழ்சிசியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
கைக்குழந்தையுடன் வாக்குசேகரிப்பு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் பல்வேறு சர்ச்சை பேச்சுகள், மோதல்கள் ஏற்படுவதையும் காண முடிகிறது. அதே நேரத்தில், பெண் நிர்வாகி ஒருவர் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையுடன் வாக்கு சேகரிப்பில் ஏற்பட்டுள்ளார். எண்ணம் இருந்தால் எதுவும் தடையில்லை என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் கடும் போட்டிக்கு மத்தியில் களமிறங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவும் போட்டியிடுகின்றனர். அதேபோல் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்தும் களம் காண்கின்றனர்.
சுயேட்சையோடு சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். எந்த பக்கம் திரும்பினாலும் அரசியல் கட்சியினர் தலைகள் தான் தென்படுகிறது. வீடு வீடாக சென்று போட்டிப்போட்டுக் கொண்டு வித்தியாசமான ஸ்டைலில் கட்சியினர் ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் - 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர்.
பெண்கள் - 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர்
இந்த வாக்களர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.