Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய  முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு பதிவு செய்வதை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 


இத்தொகுதியில் உள்ள 321 முதியவர்கள் மற்றும் 31 மாற்றுத் திறனாளிகளிடம் வாக்குப்பதிவு செய்யும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தபால் வாக்குப் பதிவு மொத்தம் 2 நாட்கள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.  


அதேபோல் அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தொடரப்பட்ட வழக்கில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் தொடர்பாக யூகத்தின் தரப்பில் வழக்கு தொடர்வதா என, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


வழக்கு விசாரணை:


ஈரோடு இடைதேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி., சி.வி. சண்முகம் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் ப்ரத சக்ரவர்த்தி ஆகீயோர் முன்னிலையில் விசாரணைக்கு இன்று வந்தது.  அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில்  தேர்தல் பணியாளர்கள்  நேரடியாக வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும்போது, இறந்தவர்கள் பெயரில் பூத் ஸ்லிப் இருந்தால் அது விநியோகிக்கப்படுவதில்லை. மேலும், அதற்கென இறந்தவர்களுக்கென தனிப் பட்டியல் உருவாக்கப்படுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிக்கான சி.ஆர்.பி.எஃப் வீரரகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. தேர்தலுக்குரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நியாயமான மற்றும் நேர்மையான முறையில் நடத்தப்படும். அதோடு, யூகத்தின் அடிப்படையிலேயே சி.வி. சண்முகம்  வழக்கு தொடர்ந்துள்ளார் எனவும், என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. 


வழக்கு விவரம்:


 அதிமுக மாநிலங்களவை எம்.பி சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனுவில், ”தொகுதியின் வாக்காளர் பட்டியலை சரி பார்த்த போது, அதில் இடம் பெற்றிருந்த பலர் தொகுதியில் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. பல வாக்காளர்களின் பெயர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளது. 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் 8 ஆயிரத்து 500 வாக்குகள் என்பதால், தற்போது இறந்தவர்கள், தொகுதியில் இல்லாதவர்கள் என 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்களில் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது. எனவே, தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். பூத் ஸ்லீப் அடிப்படையில் அல்லாமல், வாக்காளர் அடையாள அட்டை அடிப்படையில் வாக்காளர்களை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக, புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.