Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியல் முறைகேடாக தயாரிக்கப்பட்டுள்ளது என அதிமுக எம்.பி சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். இதனால் தேர்தல் நேர்மையாக நடக்காது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 50 ஆண்டுகளைக் கடந்த பெரிய இயக்கமான அதிமுக யாருக்காகவும் காத்திருக்காது எனவும், வேட்பாளரை அறிவித்துவிட்டோம், தேர்தலை சந்திக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ”இறந்த வாக்காளர்கள் 5,000 பேரின் பெயர் நீக்கப்படவில்லை. 4ல் ஒரு பங்கு அதாவது சுமார் 45 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை. அவர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளனர்” என கூறினார். ” ஈரோடு கிழக்கில் உள்ள 238 பூத்துகள் அதாவது வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியலை எங்களின் அதிமுக நிர்வாகிகள், தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் தலைமையில் தயாரிக்கபட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளது. 238 பூத்களிலும் உள்ள வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. இப்படி ஒவ்வொரு பூத்துக்கும் சுமார் 15-லிருந்து 20க்கும் மேற்பட்ட இறந்த வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது” என்றார்.
“ குறிப்பாக, 236ஆம் எண் கொண்ட பூத், ரயில்வே காலனி பூத். இங்குள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை, 239. இதில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, 670. அங்கே அதிமுக நிர்வாகிகள் கள ஆய்வு செய்யப்பட்டபோது அங்கே இருந்த வீடுகளின் எண்ணிக்கை வெறும் 49. மீதி உள்ள வீடுகள் பாதி இடிக்கப்பட்டுள்ளது, பாதி கைவிடப்பட்டுள்ளது. அந்த பூத்தின் மொத்த வாக்காளர்களில் 518 வாக்காளர்கள் அங்கு இல்லை. இங்கு இருந்த குடியிருப்புகள் ஏற்கனவே வருவாய்த்துறையால் இடிக்க்ப்படுள்ளது. இதுகுறித்து தெரிந்தும் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் இந்த வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளார்” என கூறியுள்ளார்.
”இதேபோல், வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் வீடுகளும் இல்லை, வாக்காளர்களும் இல்லை. பல்வேறு வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது. இன்று உள்ள தேர்தல் அதிகாரிகள் ஆளும் திமுகவின் சொற்களுக்கு அடிபணிபவர்களாக உள்ளனர். இதனால் தேர்தல் நேர்மையாக நடைபெறாது. எனவே நியாயமான முறையில் தேர்தல் நடைபெற தலைமை தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் கூறியதாக” கூறியுள்ளார்.