Erode East By Election 2023: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமானதையடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் இந்த தொகுதியில் மீண்டும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (21/01/2023) முதல் திமுக - காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரத்தினை தொடங்கிய நிலையில், இன்னும் வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகனுக்காக விட்டுக்கொடுத்த ஈவிகேஎஸ்
இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட காங்கிரஸ் கமிட்டி விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், தனது வயது மூப்பு மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு தனது இளைய மகன் சஞ்சய் போட்டியிடட்டும் என தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை தனது மகனுக்கு விட்டு கொடுத்துள்ளார். இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர் தேர்வை தேசிய தலைமையின் ஒப்புதலுக்காக காங்கிரஸ் தலைமையிடத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
வெற்றி வாய்ப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு என்பதே அதிமுகவின் சின்னமான இரட்டை இலைச் சின்னம் தான். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினரின் நிலைப்பாடு இபிஎஸ் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அமைந்துள்ள கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் பலம் என்பது திமுகவிற்கு நன்றாகவே தெரியும். இந்நிலையில், அதிமுகவின் முக்கிய புள்ளிகாளான செங்கோட்டையன், கே.சி கருப்பணன் ஆகியோருடைய மாவட்டம் என்பதாலும் அதிமுக இந்த இடைத் தேர்தலில் இறங்கி ஒரு கை பார்க்க தயாராகி வருகிறது, சின்னம் தொடர்பான சிக்கல் எழும் நிலையில் அதிமுகவின் குறிப்பாக எடப்பாடிக்கு வெற்றி முகம் என்பது குறைவு தான்.
அதேநேரத்தில் திமுக கூட்டணியில் களமிறங்கவுள்ள காங்கிரஸ் வேட்பாளர் நிச்சயம் ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அனுதாப ஓட்டு என்பதும், ஆளும் திமுகவின் ஆதரவும் இருக்கும் போது காங்கிரஸ்க்கு வெற்றி முகம் பிரகாசமாகவே உள்ளது.
இரட்டை இலைச் சின்னத்துடன் அதிமுகவின் இரு அணிகளில் யாரேனும் ஒருவர் களமிறங்கினாலும் காங்கிரஸ்க்கு நெருக்கடி தான்.