தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மறு சீரமைப்பு செய்யப்பட்ட மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.
இதற்கிடையே, உறுப்பினர்களில் ஒருசிலர் உயிரிழந்ததாலும் பதவி விலகியதாலும் பதவிகள் காலியாகின. இந்த பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகள் என 34 இடங்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கி நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் ஜூன் 27ம் தேதிடன் முடிவடைந்ததை தொடர்ந்து, 28ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை முடிந்தது. இதனை அடுத்து இன்று காலை 7:00 மணி முதல் தேர்தல் நடைபெற்ற வருகிறது
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல்
காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தேர்தல் இன்று நடைபெறுகிறது. 36வது வார்டில் 2154 ஆண் வாக்காளர்கள், 2356 பெண் வாக்காளர்கள் என 4510 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். திமுக, அமமுக, பாமக நாம் தமிழர், அதிமுக சுயேசையாக போட்டியிடுகிறது மேலும் ஒரு சுயேச்சை என மொத்தம் 6 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தியாகி நடுநிலைப்பள்ளியில் நான்கு வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்கு பதிவு நடைபெறுகிறது. மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு வாக்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு செய்ய வரும் வாக்காளர்களுக்கு முக கவசம் அணிந்து வரவேண்டும் எனவும், கை உரை வழங்கப்பட்டு வரகின்றது. வரும் 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அறிஞர் அண்ணா அரங்கத்தில் நடைபெறுகிறது
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய மதுராந்தகம் 15-வது தேர்தல் நடைபெறுகிறது . திம்மாவரம் 4-வது வார்டு கிராம ஊராட்சி உறுப்பினர், பொன்பதிர்கூடம் 2-வது வார்டு ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, திரிசூலம் 1-வது வார்டு ஊராட்சி உறுப்பினர் பதவி, நன்மங்கலம் 1-வது வார்டு ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்காக 40 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் 1-வது வார்டு, மாம்பாக்கம் ஊராட்சித் தலைவர், பூந்தமல்லி அகரமேல் ஊராட்சி 3-வது வார்டு, மீஞ்சூர் மெதூர் ஊராட்சி 3-வது வார்டு, சோழவரம் நல்லூர் ஊராட்சி 8-வது வார்டு ஆகியவற்றின் உறுப்பினர் பதவிகளுக்கு 18 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.