மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இதில் I.N.D.I.A கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
இந்த தொகுதி காங்கிரஸ் கட்சி பலமாக உள்ள தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்த தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிடவுள்ளார் என்ற பேச்சுகள் அடிபடுகின்றது. இவர் ஏற்கனவே இந்த தொகுதியில் 5 முறை போட்டியிட்டுள்ளார்.
கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பேரணியில், அவரது வேட்புமனு அறிவிக்கப்பட்டதால், பதான் இன்று மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மக்களவை உறுப்பினர் மவுமா மொய்த்ரா தான் ஏற்கனவே போட்டியிட்ட கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
காங்கிரஸ் கட்சியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் I.N.D.I.A கூட்டணியில் உள்ளது. ஆனால் இரண்டு கட்சியும் மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் கூட்டணி பேச்சுவார்த்தை உடன்பாட்டினை எட்டமுடியாததால், இரண்டு கட்சிகளும் தனித்தே களமிறங்கவுள்ளது.
அதேபோல் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி டயமண்ட் ஹர்பாரில் போட்டியிடவுள்ளார். இதற்கு முன்னர் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது பாஜகவின் வெற்றிதான். பாஜக மேற்கு வங்கத்தில் 18 இடங்களைக் கைப்பற்றும் என அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மொத்தம் 303 இடங்களில் வென்றது.