Geniben Thakor: குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில், ஜெனிபென் தாக்கூர் என்பவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.


குஜராத்தில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி, பலருக்கு மகிழ்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலமான, குஜராத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.


அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளில் 25ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பனஸ்கந்தா தொகுதியில் மட்டும் காங்கிரஸை சேர்ந்த ஜெனிபென் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்.


சாதித்து காட்டிய ஜெனிபென் தாக்கூர்:


பனஸ்கந்தா தொகுதியில் போட்டியிட்ட ஜெனிபென் மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்து 883 வாக்குகளை பெற்றார். தன்னை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சக பெண் வேட்பாளரான ரேகாபென் சவுத்ரியை, 30 ஆயிரத்து 406 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தினார். ரேகாபென் ஒரு பொறியியல் பேராசிரியர் மற்றும் 1969 இல் பனாஸ் பால் பண்ணையை நிறுவிய கல்பாபாய் சவுத்ரியின் பேத்தி ஆவார். 2019 மற்றும் 2014 ஆகிய இரண்டு, மக்களவை தேர்தலிலும் பனஸ்கந்தா மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு தேர்தல்களில் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வென்ற நிலையில், தற்போது அந்த நிலை மாற்றம் கண்டுள்ளது.






மக்களிடம் நிதி திரட்டி பாஜகவை வீழ்த்திய ஜெனிபென்..!


நிதி நெருக்கடிகளை எதிர்கொண்ட போதிலும், பொதுத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். ஜெனிபென்னுக்கு நிதி ஆதரவு அளிக்கும் சூழலில் தாங்கள் இல்லை என காங்கிரஸ் அறிவித்தது. இதையடுத்து கிரவுட் ஃபண்டிங் மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதியை திரட்டி தேர்தளில் களம் கண்டார். பாஜக வேட்பாளரான சவுத்ரி தேர்தல் பரப்புரையின் போது, நரேந்திர மோடி,  அயோத்தியில் ராமர் கோயில் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தினார். 


அதே நேரத்தில் தாக்கூர் வேலையின்மை, தேர்வுத் தாள் கசிவுகள், விவசாய துயரங்கள் மற்றும் சமூக நீதி போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தினார்.


யார் இந்த ஜெனிபென் தாக்கூர்?


இவர் லாட்னூன் ஜெயின் விஸ்வ பாரதி இன்ஸ்டிடியூட்டில் பிஏ பட்டம் பெற்றுள்ளார். எளிமையானவராகவும், அளிதில் அணுகக்கூடியவராகவும் காணப்பட்ட ஜெனிபென் தாக்கூர், காங்கிரஸில் அடிமட்ட ஊழியராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.


கடந்த 2012 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில், வாவ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றபோது அவர் தனது தேர்தல் வாழ்க்கைக்கு அறிமுகமானார். மதுவுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் உறுதியான நிலைப்பாட்டால் பொதுமக்களிடையே கவனம் ஈர்த்தார்.


2017 ஆம் ஆண்டு பெரும்பான்மை பலத்துடன் பாஜக மாநிலத்தில் வெற்றிபெற்றபோதும், ஜெனிபென் வாவ் தொகுதியில் இருந்து பாஜகவின் பலமான மற்றும் பனாஸ் டெய்ரி தலைவரான ஷகர் சவுத்ரியை வீழ்த்தி பலரையும் ஆச்சரியப்படுத்தினார். அடுத்த தேர்தலிலும் மீண்டும் அந்த தொகுதியில் வெற்றி பெற்று அசத்தினார்.


அந்த நம்பிக்கையில் இந்த முறை அவருக்கு மக்களவையில் போட்டியிட வாய்ப்பளிக்கபபட்டது. காங்கிரஸின் எதிர்பார்ப்பை வீணடிக்காமல், 10 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்திலிருந்து ஒரு எம்.பியை அக்கட்சிக்கு வழங்கியுள்ளார்.