தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் வேட்புமனு தாக்கலும் நடைபெற்று வருகிறது.
சென்டிமென்ட் கோயில்:
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள பெரியசோரகை பகுதியில் உள்ள சென்றாய பெருமாள் திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு முன்பும், முக்கிய பொறுப்பேற்கும் போதும் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கு முன்பாக நெடுஞ்சாலை துறை அமைச்சர், முதலமைச்சரானபோதும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் என அனைத்து முக்கிய பதவிகளுக்கும் தீர்வாகும் போது இந்த கோவிலில் நேரில் வந்து சென்றாய பெருமாள் திருக்கோவில் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு சென்றாய் பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்தை நேரில் வந்து நடத்தி வைத்தார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட பிரச்சாரம் மற்றும் இறுதி கட்ட பிரச்சாரத்தை இக்கோவிலில் இருந்து தான் துவங்கி மேற்கொண்டார். இறுதியாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு தான் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இபிஎஸ் பிரச்சாரம்:
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமென நாளை சென்றாய பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார். பின்னர் திங்கட்கிழமை திருச்சியில் நடைபெறும் அதிமுக நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு 40 தொகுதிகளுக்குமான வேட்பாளரை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரம் செய்ய உள்ளோம். அதன் பின்னர் தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.