வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. திமுக தற்போது வரை 20 வார்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 வார்டுகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு வார்டும் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக 74 வார்டுகளில் திமுக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. 




இதனிடையே 74 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. கூட்டணிகளுக்கு வார்டுகளை ஒதுக்கியதாலும், வேட்பாளர் தேர்விலும் அதிருப்தி அடைந்த திமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்சிக்கு உக்கடம் பகுதியில் உள்ள 84வது வார்டு ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தொகுதியில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், நேரடியாக போட்டியிடாமல் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக திமுகவினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இன்று சுங்கம்-உக்கடம் புறவழிச்சாலையில் அப்பகுதியில் திமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு நெரிசல் ஏற்பட்டது. 




அப்பகுதியில் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று வரும் நிலையில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவது சரியல்ல எனவும், கட்சியின் மூத்த நிர்வாகியான சேக் அப்துல்லாவிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் தெரிவித்தனர். போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய போதும் கலைந்து செல்லாததால், 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.




இதேபோல கோவை 26 வது வார்டை திமுக கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு ஒதுக்கியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து பீளமேடு திமுக கட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவிற்கே அந்த வார்டை ஒதுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதனிடையே கோவை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சி.ஆர். இரமசந்திரனை கண்டித்து, செல்வபுரம் பகுதியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 77 வது வார்டில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜலட்சுமியை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பணத்தை பெற்றுக்கொண்டு தகுதியில்லாதவர்களுக்கு சீட் ஒதுக்கியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 43 பேர் கைது செய்யப்பட்டனர்.