சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயதில் திமுக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் தீர்மானம்: நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு வியூகம் வகுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் வெற்றிக்காக உழைத்த திமுக தொண்டர்கள் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரண்டாவது தீர்மானம்: இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, 40 தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக ஜூன் 14ஆம் தேதி கோவையில் கொண்டாடுவது என இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மூன்றாவது தீர்மானம்: நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேச தலைவர்கள் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டுமென மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக நிதி உரிமை மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் அயராது குரல் கொடுப்போம் என மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நான்காவது தீர்மானம்: நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீட் தேர்வை முற்றிலுமாக விளக்க வேண்டும் அல்லது தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வதாக நான்காவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐந்தாவது தீர்மானம்: நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என ஐந்தாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி கைப்பற்றியது.
தேசிய அளவில் இந்தியா கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற்றது. உத்தர பிரதேசத்தில் 43 தொகுதிகளையும் மகாராஷ்டிராவில் 30 தொகுதிகளையும் மேற்குவங்கத்தில் 30 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி கைப்பற்றியது.
பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அவர்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 240 இடங்களில் வெற்றிபெற்றது. ஆனால், ஆட்சி அமைக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உள்ளது.