தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (Tamil Nadu Teachers Education University) சார்பாக கல்லூரி, பல்கலைகழக மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பெறுவதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது தொடர்பாக எம்.பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுன் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை பெற்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப வேண்டும் என்று வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கல்லூரிகளுக்கு இது தொடர்பாக மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை பெற்று குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்ப வேண்டும் என்று சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
ஆளுநர் மாளிகையில் இந்த செயல்பாட்டிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தி.மு.க. எம்.பி. பி. வில்சன் எல்லை மீறும் ஆளுநரின் செயல் குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் தெரிவிக்கப்படும் என்றும் இதுபோன்ற செயல்களை ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளதன் விவரம்..
, “மார்ச் -14, 2024 அன்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழமானது, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்களின் விவரங்களை சேகரிக்க மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ராஜ்பவன் அலுவலகத்திலிருந்து வாய்மொழி அறிவுறுத்தல்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும், மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகளின் விவரங்களை Excel வடிவத்தில், ஆளுநர் அவர்களின் செயலகமான ஆளுநர் மாளிகைக்கு 2024 மார்ச் 19 ஆம் தேதிக்குள், குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கல்லூரியின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.. இந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் பரவலான எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்த அறிவுறுத்தலானது திரும்பப் பெறப்பட்டுள்ளது..
இருப்பினும், இதுபோன்ற தகவல்கள் ஏன் கோரப்பட்டன என்பது குறித்து மாணவர் சமூகத்திற்கும் - மக்களுக்கும் மாண்புமிகு ஆளுநர் அலுவலகம் பதிலளிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள் கேட்கப்பட்டதன் நோக்கம் என்ன? தேர்தலுக்காக மாணவர்கள் குறிவைக்கப்படுகின்றனரா?
யாருடைய உத்தரவின் பேரில் இந்த விவரங்கள் கோரப்பட்டன? நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் அரசியல் செய்ய ஆளுநர் பதவிகள் பயன்படுத்தப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் ஆளுநர்கள் தலையிடுவதாகவும், அவர்களின் கருத்தியலை ஊக்குவிக்கும் ஒரே நோக்கத்துடன் இருப்பதாகவும் பல மாநிலங்கள் புகார் தெரிவித்திருக்கின்றன.. மாணவர்களின் மனதில் தேவையற்ற செல்வாக்கை செலுத்த ஆளுநர் அலுவலகத்தின் நிர்வாக இயந்திரத்தைப் பயன்படுத்துவது தேர்தல் குற்றமாகும். ” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜக்கண்ணப்பன் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் அறிக்கை வெளியிட அறிவுறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவரையும் எம்.பி. வில்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.