பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று, இந்த தடவையும் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடைசி கட்ட வாக்குப்பதிவு, ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைபெறுகிறது.
எதிர்பார்ப்பை கிளப்பும் நாடாளுமன்ற தேர்தல்:
வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்க உள்ளது.
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருப்பதால் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்ற பாஜக கடும் முயற்சி செய்து வருகிறது. ஆனால், கடந்த முறை போன்று, இந்த முறையும் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் திமுக தலைமையிலான கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது.
இதற்காக, தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்பத்தூருக்கு வருகை புரிந்து ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் திமுக வேட்பாளர் சிஎன் அண்ணாதுரைக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மக்களுக்கு உதயநிதி அளித்த வாக்குறுதி:
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "குறைந்தது 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அண்ணாதுரையை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அப்படி ஒரு வெற்றிபெறும் பட்சத்தில் மாதத்தில் இருமுறை திருவண்ணாமலைக்கு வந்து தொகுதி பிரச்சினைகளை கேட்டு அறிவேன்.
கொரோனோ காலத்தில் இந்தியாவில் அதிக தடுப்பூசி போட்டுக் கொண்ட மாநிலம் என நாம் பெயர் பெற்றோம். பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் பேருந்தை ஸ்டாலின் பேருந்து என அழைக்கின்றனர். கல்வி கற்பதற்காக தொடக்க நிலையில் காலை உணவு வழங்கும் திட்டம்.
அரசு கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டு மக்கள் இனிமேல் மிஸ்டர் 29 பைசா என்று அழைக்க வேண்டும்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வைக்கப்பட்ட செங்கலை நான் எடுத்து வந்து விட்டேன். நான் கல்லை தூக்கி காட்டுகிறேன் என எடப்பாடி பழனிசாமி எப்ப பார்த்தாலும் குற்றம் சாட்டுகிறார். நான் வேணும்னா கல்லை காட்டுறேன். ஆனா, நீங்க மோடியிடம் பல்ல காட்டுறீங்க" என மோடி மற்றும் எடப்பாடி சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை எடுத்து காண்பித்தார் உதயநிதி.
தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் வந்ததன் காரணமாக பிரச்சாரத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு உதயநிதி ஸ்டாலின் சென்றுவிட்டார்.
திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.