நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று தொடங்கியது. இதற்காக காலை முதலே அந்தந்த தொகுதியில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் சரியாக காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. இதனையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவரும், வேட்பாளருமான நெல்லை முபாரக் தனது சொந்த ஊரான நெல்லை மேலப்பாளையம் கணேசபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, "நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜனநாயக தேர்தல் திருவிழாவான நாடாளுமன்ற தேர்தலின் தேர்தல் பதிவு நாளான இன்று எனது வாக்கினை பதிவு செய்தேன். நாட்டின் ஜனநாயகத்தை விரும்ப கூடிய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து இந்திய குடிமக்களும் 100% வாக்குப்பதிவுக்கு சென்று வாக்களிக்க வேண்டும். 100% வாக்குப்பதிவு மட்டுமே நாட்டின் உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்தும்.
உண்மையான ஜனநாயகம் மலர நல்லாட்சி அமைந்திட வேண்டும். தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி மக்களின் பிரச்சினைகளை பேசவில்லை. மக்களிடத்தில் தாங்கள் செய்த சாதனை ஒன்றுமில்லாத நிலையில் பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது. அந்த பணபலம் மட்டுமே தங்களை வெல்ல வைக்கும் என கருதுகிறார்கள். ஆனால் மக்கள் அந்த பண பலத்தை முறியடித்து உண்மையாகவே தங்களுக்காக யார் போராடுகிறார்கள். மக்கள் குரலை யார் பிரதிபலிக்கிறார்கள் என்பதை அறிந்து இந்த தேர்தலில் முடிவு செய்வார்கள். பண பலம் என்பது இந்த தேர்தலில் எடுபடாது. பல கோடிக்கணக்கில் ஆளுங்கட்சியின், பாஜகவின் பணம் கிடைத்திருப்பதாக தகவல் வருகிறது. தமிழகத்தின் தேர்தல் ஆணையம் பரிசு பொருட்கள் கொடுத்தோ பணம் கொடுத்தோ ஜனநாயக உரிமையை விலைக்கு வாங்கும் மோசமான செயலை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.