ABP Cvoter Exit Poll 2024: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இறுதிகட்டமான 7வது கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவு பெற்றது. இந்த நிலையில், ஏபிபி – சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு இன்று வெளியாகியுள்ளது.


டெல்லியில் யார் ஆதிக்கம்?


நாட்டின் தலைநகரான டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளது. அதாவது, சந்த்னி சௌக், கிழக்கு டெல்லி, நியூ டெல்லி, வடகிழக்கு டெல்லி,  வடமேற்கு டெல்லி, தென் டெல்லி, மேற்கு டெல்லி தொகுதிகள் இந்த 7 தொகுதிகள் ஆகும்.


ஏபிபி – சி வோட்டர் கருத்துக்கணிப்பின்படி, இந்தியா கூட்டணி 1 முதல் 3 தொகுதிகள் வரையிலும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 4 முதல் 6 வரை வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.


வாக்கு சதவீதம்:


வாக்குகள் சதவீதத்தின்படி, டெல்லியில் இந்தியா கூட்டணி 45.8 சதவீத வாக்குகளும், தேசிய ஜனநாயக கூட்டணி 51.1 சதவீத வாக்குகளும் பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கு 3.1 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.


டெல்லியில் தற்போது 7 தொகுதிகளும் பா.ஜ.க. வசமே உள்ளது. இதனால், இந்த முறையும் 7 தொகுதிகளையும் கைப்பற்ற பா.ஜ.க. முனைப்பு காட்டி வந்த நிலையில், கருத்துக்கணிப்பும் அவர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. டெல்லியில் தற்போது ஆளுங்கட்சியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இருக்கிறது.


ஆம் ஆத்மி கட்சிக்கு கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே அமலாக்கத்துறையின் பல வழக்குகளில் சிக்கியிருப்பது அவர்களுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. குறிப்பாக, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


இந்த தாக்கம் மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏபிபி – சி வோட்டர் கருத்துக்கணிப்போ டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும் பா.ஜ.க. கூட்டணிக்கே செல்லும் என்று வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.