தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவியை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது. இந்த நிலையில் கட்சித் தலைமைக்கு எதிராக நகர்மன்ற தலைவர் பதவிக்கு திமுக கவுன்சிலர் ரேணுபிரியா போட்டியிட்டு வென்றதால் அதிர்ச்சி  அடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மறைமுகத் தேர்தலை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.



தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில்  திமுக  போட்டியிட்டு 19 இடங்களை வென்றிருந்த நிலையில், மன்ற தலைவர் பதவியை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வந்தது. ஆனால் தேனி மாவட்ட நகர் மன்ற தலைவர் பதவி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டது . காங்கிரசுக்கு தேனி நகர மன்ற தலைவர் பதிவு ஒதுக்கீடு செய்யப்பட்டது திமுக நிர்வாகிகள் இடையே பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 




தேனி அல்லிநகரம் நகராட்சி நகர்மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனால் தேர்தலில் வெற்றி பெற்று, திமுக நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றும் நோக்கில்  தேனி  திமுக நகர செயலாளர் பாலமுருகன் தனது மனைவியான ரேணு பிரியாவை 10 வார்டில்  போட்டியிட வைத்து வெற்றியும் பெறச் செய்துள்ளார். அதேபோல் திமுக நகரச் செயலாளரான பாலமுருகன் 20 வது வார்டில் போட்டியிட்டு அவரும் வெற்றி பெற்றுள்ளார். தேனி நகராட்சி நகரமன்ற தலைவர் பதவி கிடைக்கும் என்ற நோக்கில், ரேணு பிரியா பதவி வகித்து வந்த  வடபுதுப்பட்டி கிராம ஊராட்சி தலைவர் பதவியை  ராஜினாமா செய்துவிட்டு நகர்மன்ற தேர்தலில் போட்டியிட்டார்.


அதேபோல தேர்தலில் வெற்றி  பெற்ற பின் நகர்மன்ற தலைவருக்கான நடைபெறவுள்ள மறைமுக தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில்  ரேணு பிரியா, பாலமுருகன் மற்றும் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள்  எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தேனி நகர நகர்மன்றத் தலைவர் பதவி, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தலைமை சார்பாக  காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு காங்கிரஸ் வேட்பாளரான சற்குணத்தை வேட்பாளராக அறிவித்தது.   தேனி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.




 இந்த நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தலில், திமுக தலைமை சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரான காங்கிரஸை சேர்ந்த சர்குணம் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த ரேணு பிரியா  பாலமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.கூட்டணி தர்மத்தை மீறி திமுகவைச் சேர்ந்த ரேணு பிரியா வேட்புமனு தாக்கல் செய்ததாக காங்கிரசை சேர்ந்தவர்கள் தேர்தலை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.




பின்னர் நடந்த  மறைமுக தேர்தலில்  திமுகவைச் சேர்ந்த ரேணு   பிரியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் .மறைமுக தேர்தலில் திமுகவை சேர்ந்த 19 கவுன்சிலர்களும், காங்கிரஸ், அமமுக, சுயேட்சை வேட்பாளர்கள் தலா இரண்டு கவுன்சிலர்களும், அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த ஒரு கவுன்சிலர்களும் தேர்தலுக்கு வருகை புரிந்தனர். தேர்தலில் காங்கிரசை சேர்ந்த இரு வேட்பாளர்கள் மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளர் தேர்தலைப் புறக்கணித்து வெளியே சென்றது குறிப்பிடத்தக்கது.சிறிது நேர  சலசலப்புக்கு பிறகு தேனி அல்லிநகரம் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளதால் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மகிழ்ச்சியில் கொண்டாடினர். காங்கிரஸிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக கைப்பற்றியதால் காங்கிரஸ் கட்சியினர்  நகராட்சி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போலிசார் பேச்சுவார்த்தை நடத்தில் ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்