PM Modi: காங்கிரஸின் ஆபத்தான நோக்கங்கள் வெளிப்பட தொடங்கியுள்ளன என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பயத்தில் உலக சக்திகள் - மோடி


சத்தீஸ்கரின் சர்குஜாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, “சத்தீஸ்கரில் ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டிருப்பதற்கு ஒட்டுமொத்த நாடுமே சாட்சியாக உள்ளது. 'விக்சித் பாரத்' மற்றும் 'விக்சித் சத்திஸ்கர்' ஆகியவற்றிற்காக உங்கள் ஆசிர்வாதத்தைப் பெற நான் இங்கு வந்துள்ளேன்.  விக்சித் பாரத் என்று நான் கூறும்போது, ​​காங்கிரசும், உலகில் அமர்ந்திருக்கும் சில சக்திகளும் கோபமடைகின்றன.  இந்தியா வலுவானதாக மாறினால்  சில சக்திகளின் ஆட்டம் கெட்டுவிடும். இந்தியா சுயசார்பாக மாறினால் சில சக்திகள் தங்களது கடைகளை மூடவேண்டியிருக்கும். அதனால் தான் அவர்கள் காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A. கூட்டணியின் ஆட்சியை விரும்புகின்றன.


காங்கிரசை சாடிய பிரதமர் மோடி:


காங்கிரஸின் மோசமான நிர்வாகம் மற்றும் அலட்சியமே நாட்டின் அழிவுக்கு காரணம். இன்று பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்திற்கு எதிராக பாஜக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையை பரப்பும் மக்களை காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது. மேலும் அவர்களை தைரியாமானவர்கள் எனவும் அழைக்கிறது.  இந்த காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர், தீவிரவாத்கள் கொல்லப்படும்போது கண்ணீர் வடிக்கிறார்.   இதுபோன்ற செயல்களால், நாட்டு மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர்.


காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானபோது, ​​காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் முத்திரை இருப்பதாக அன்றே கூறினேன். அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்போதே, இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்று பாபா சாகேப் அம்பேத்கர் தலைமையில் முடிவு செய்யப்பட்டது.  பாபா சாகேப் அம்பேத்கரின் வார்த்தைகளையும் பொருட்படுத்தாமல், ஆந்திராவில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது. அதனை நாடு முழ்வுவதும் கொண்டு வரவும் திட்டமிட்டது.  எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி ஒதுக்கீட்டின் சில பகுதியை திருடுவதன் மூலம் மதத்தின் அடிப்படையில் சிலருக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயன்றது.


காங்கிரஸின் வாரிசு வரி திட்டம்:


அரச குடும்ப இளவரசரின் ஆலோசகரும், அரச குடும்பத்தின் இளவரசரின் தந்தையின் ஆலோசகரும் நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இப்போது இவர்கள் இதைவிட ஒருபடி மேலே சென்றுவிட்டார்கள். காங்கிரஸ் வாரிசு வரி விதிக்கப் போவதாகச் சொல்கிறது. மேலும் பெற்றோரிடமிருந்து பெற்ற பரம்பரை சொத்துக்கும் வரி விதிக்கப் போகிறது. உங்கள் கடின உழைப்பால் நீங்கள் சேர்த்த சொத்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படாது. அதையும் காங்கிரஸ் உங்களிடமிருந்து பறித்துவிடும். நீங்கள் உயிருடன் இருக்கும் வரை காங்கிரஸ் அதிக வரிகளை விதிக்கும், நீங்கள் உயிருடன் இல்லாத போது அது உங்களுக்கு பரம்பரை வரியை சுமத்திவிடும். காங்கிரஸ் கட்சி முழுவதையும் தங்கள் மூதாதையரின் சொத்தாகக் கருதி, பிள்ளைகளிடம் ஒப்படைத்தவர்கள், இப்போது இந்தியர்கள் தங்கள் சொத்தை தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்பதை விரும்பவில்லை” என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.


பரம்பரை சொத்துக்களுக்கு வாரிசு வரி விதிப்பது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடஸ் பேசியிருந்தார். ஆனால், அது கட்சியின் கருத்தல்ல என காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.