கோவையில் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்பு வாங்கிய ராகுல் காந்தியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு முன், சாலையில் குறுக்கே இருக்கும் சுவரில் ஏறி குதித்து மைசூர் பாக் வாங்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் இரு தலைவர்களும் இணைந்து உரையாற்றினார். அப்போது பேசிய ராகுல் காந்தியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “அன்புள்ள சகோதரர்” என்று குறிப்பிட்டு பேச தொடங்கினார். 


அதன்பிறகு ஸ்வீட்களை வாங்கிய அந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ராகுல் காந்தி, “தமிழ்நாட்டில் பிரச்சாரத்திற்கு இனிமை சேர்க்கும் வகையில், எனது சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு கொஞ்சம் மைசூர் பாக் வாங்கித் தந்தேன்” என குறிப்பிட்டிருந்தார். 


அதன்பிறகு, பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆரதழுவி கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார். பின்னர், யாரும் எதிர்பார்க்காதபோது, தான் வாங்கி வந்த இனிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீட்டினார். இதை சற்றும் எதிர்பார்க்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரிப்புடன் அதை வாங்கி கொண்டார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகம் முழுவதும் ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் வெளிப்பட்டது. 



இனிப்புடன் பிரச்சாரத்தை தொடங்கிய ராகுல் காந்தி: 


இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரச்சார  கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள ராகுல் காந்தி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் சிங்காநல்லூரிலுள்ள விக்னேஷ்வராஸ்வீட்ஸ் கடை அருகே தனது காரை நிறுத்தி, ஒரு கிலோ குலாப் ஜாமூன் மற்றும் அனைத்து இனிப்புகளும் கலந்து ஒரு கிலோ வாங்கினார்.  பின்னர்,  ராகுல் காந்தி ஊழியர்களை அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 


வேட்பாளர்களை ஆதரித்து பேசும் முன் ராகுல் காந்தி இனிப்புகளை வாங்கி பிரச்சாரத்தை கோவையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைதளங்களில், இந்த வீடியோ வைரலாகி வருகிறது


பிரச்சாரத்தில் ராகுல் காந்தி என்ன பேசினார்..? 


கோவை பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, “நரேந்திர மோடி மற்றும் அதானி கொள்கைகள் இரு இந்தியாவை உருவாக்கியுள்ளன. ஒரு இந்தியா கோடீஸ்வரர்களின் இந்தியா மற்றொன்று ஏழைகளின் இந்தியா. புயல் வரப்போகிறது நரேந்திர மோடி ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார். மோடி அரசு உண்மையில் அதானி அரசு, அதை அதானி அரசு என்று அழைக்க வேண்டும், நரேந்திர மோடி அரசு அல்ல. அரசியலமைப்பு ஒரு சாதாரண புத்தகம் அல்ல, அது ஆன்மா, அது இந்திய மக்களின் குரல். அந்த ஆன்மாவும் அந்தக் குரலும் பிரதமராலும் ஆர்.எஸ்.எஸ்ஸாலும் தாக்கப்படுகின்றன. காவி கட்சி எம்பிக்கள் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றப் போகிறோம் என்று அர்த்தம்.


இந்தியாவின் நிறுவனங்கள் அதன் அனைத்து மக்களுக்கும் சொந்தமானவை, அவை ஆர்எஸ்எஸ்-க்கு சொந்தமானவை அல்ல. பல்கலைக்கழகங்களின் பெரும்பாலான துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து வந்தவர்கள் மற்றும் அதிகாரத்துவம் மற்றும் சட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ்ஸால் ஊடுருவி வருகிறது” என்று தெரிவித்தார்.