மக்களவைத் தேர்தலுக்கு ஏற்கனவே காங்கிரஸ் முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. இந்நிலையில், இன்று அதாவது மார்ச் 12ஆம் தேதி இரண்டாவது கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெளியிட்டார். இதில் அசாம், மத்திய பிரதேசம், குஜராத், உத்ரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 








இந்த பட்டியலில் உள்ள 43 வேட்பாளர்களில் 10 பேர் பொது வேட்பாளர்கள், 13 ஓபிசி வேட்பாளர்கள், 10 எஸ்சி வேட்பாளர்கள், 9 எஸ்டி வேட்பாளர்கள் மற்றும் ஒரு முஸ்லிம் வேட்பாளர் இடம் பெற்றுள்ளார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். 



 














அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் தொகுதியில் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் போட்டியிடுகிறார். மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் நகுல்நாத் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் சுரு தொகுதியில் ராகுல் கஸ்வாவும், ராஜஸ்தானின் ஜலோரில் வைபவ் கெலாட்டும் போட்டியிடுகின்றனர். மத்தியப் பிரதேசத்தின் பிந்த் தொகுதியில் பூல் சிங் பரையா போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி வெளியிட்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

வேட்பாளர்களில் முக்கியமானவர்களாக அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகோயின் மகன் கௌரவ் கோகோய்,  ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் மற்றும் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவர் களமிறங்குவது பா.ஜ.க.விடம் இருந்து சரமாரியான வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகளை எழுப்ப அதிக வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றது. 

 

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத்தின் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவில் நாகுல் நாத் இணையப்  போவதாகக் கூறப்பட்ட நிலையில் , தற்போது நாகுல் நாத் அவரது தந்தை பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியான சிந்த்வாராவில் களமிறக்கப்பட்டுள்ளார். 

லோக்சபாவில் காங்கிரஸின் துணைத் தலைவராக உள்ள கௌரவ் கோகோய், அஸாமில் 2019இல் போட்டியிட்ட கலியாபோர் தொகுதிக்கு பதிலாக இம்முறை ஜோர்ஹட்டில் போட்டியிடுகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலோர் தொகுதியில் போட்டியிடும் வைபவ் கெலாட், 2019ல் நடந்த தேர்தலில் ஜோத்புட்டில் எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் தோல்வியடைந்தார்