நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் ராஜஸ்தானில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், தேசத்தின் செல்வத்தை முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்ற அவர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா என்றார்.




மேலும், ‘பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது’ என்றார் மோடி. இந்திய அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்கின்றனர் எதிர்கட்சியினர்.




மோடியின் சர்ச்சை பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தேச ஒருமைப்பாட்டிற்கு பாதகமாகவும் மத ஒழிப்பு உணர்வை தூண்டும் வகையிலும் ராஜஸ்தான் பரப்புரை கூட்டத்தில் பேசிய மோடி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் புகார் மனுவினை அளித்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




நேற்று சர்ச்சையாக பேசிய நிலையில் இன்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். பிரதமர் மோடி பேசும்போது, இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். முன்பு குறைவான ஹஜ் ஒதுக்கீட்டால், லஞ்சம் கொடுத்த அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக சவுதி இளவரசியிடம் நான் பேசி இஸ்லாமியர்கள் ஹன் பயணம் மேற்கொள்வதற்கான கோட்டாவை அதிகரித்து கொடுத்தேன். விசாவும் எளிதாக்கப்பட்டது. ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியே ஹஜ் செல்ல முடியும் என்பதால், இஸ்லாமிய சகோதரிகள் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது என பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.