மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி நேற்று பரப்புரை மேற்கொண்டார். 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 40 தொகுதிகளையும் தேசிய, மாநில கட்சிகள் சுற்றி வளைத்து சிட்டி தொடங்கி கடைக்கோடி கிராமம் வரை பரப்புரை மேற்கொண்டு வருகிறது. இன்றைய தினம் பிரதமர்  மோடி சென்னையில் வாகன பேரணி மேற்கொண்டு தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவுள்ளார். 


இப்படியான நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சி நேற்று மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கினார். அவர் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து வாகனத்தில் சென்று மக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய இமான் அண்ணாச்சி, “நம்ம பகுதியில் (மத்திய சென்னை) நான் இன்று (நேற்று) பரப்புரையை ஆரம்பிக்கிறேன். இதுதான் பரப்புரையின் முதல் மேடை. நம்ம மக்களை எல்லாம் பார்க்கும்போது அவர்கள் முகத்தில் ஒரு மலர்ச்சி என்பது தெரிகிறது. இந்த முக மலர்ச்சி மட்டும் தான் இருக்க வேண்டும். தாமரை பூவின் மலர்ச்சி மட்டும் இருக்கக்கூடாது. உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து கடந்த முறை தயாநிதி மாறனுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தோம். இந்த 5 ஆண்டுகளில் அவர் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். 


நம்முடைய தேவைகளை மத்தியில் இருக்கும் எதிரணி தலைவரான மோடியிடம் தெரிவிக்கும்போது அவர் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லுவார். நான் பரப்புரை வாயிலாக யாரையும் தாக்கி பேச வரவில்லை. எதிரே போட்டியிடும் வேட்பாளர்கள் யார், அவர்கள் வாக்கு கேட்டு போகும் இடத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மத்திய சென்னை தொகுதி திமுகவின் கோட்டையாகும். இங்கு வந்து யாரும் ஓட்டை எல்லாம் போட முடியாது.


மத்தியில் இருக்கும் பாஜவை விரட்டி காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும். அவர்கள் நமக்கு என்ன வேண்டுமோ அதை செய்து தருவார்கள். அண்ணாமலை இரவில் எழுதி வைத்ததை காலையில் ஒப்பிக்கிறார். அவர் சொல்வதில் பல விஷயங்கள் பொய் என திமுகவினர் தெரிவிக்கிறார்கள்" என இமான் அண்ணாச்சி தெரிவித்தார். 




மேலும் படிக்க: Seeman: காங்கிரஸ், பாஜகவை ஏன் புறந்தள்ள வேண்டும்? - பட்டியலிட்ட சீமான்