நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.  22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சி மற்றும் குளித்தலை, பள்ளபட்டி, புகழூர் நகராட்சிகள், அரவக்குறிச்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், மருதூர், நங்கவரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. வருகின்ற 19-ஆம் தேதி (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.



வாக்கு எண்ணிக்கை மையங்கள்


கரூர் மாநகராட்சி வாக்குகள் அரசு கலைக் கல்லூரியிலும், புகழூர் நகராட்சி மற்றும் தோட்டக்குறிச்சி பேரூராட்சி வாக்குகள் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்படுகிறது. குளித்தலை நகராட்சி வாக்குகள் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பள்ளப்பட்டி நகராட்சி வாக்குகள் உஸ்வத்துல் ஹஸானா பள்ளியிலும், எண்ணிக்கை நடைபெறுகிறது.





 


பேரூராட்சிகள்


புலியூர், உப்பிடமங்கலம் பேரூராட்சி வாக்குகள் புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியிலும், மருதூர், நங்கவரம், கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டசோழபுரம் வாக்குகள் மாயனூர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், அரவக்குறிச்சி பேரூராட்சி வாக்குகள் அரசு மேல்நிலைப்பள்ளி அரவக்குறிச்சியிலும் எண்ணப்படுகிறது.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


கரூர் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையமான கரூர் அரசு கல்லூரி, புலியூர் ராணி மெய்ம்மை பள்ளி மையத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், கரூர் மாவட்ட எஸ்பி. சுந்தரவடிவேல் ஆகியோர் இன்று பார்வையிட்டு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்தனர். அப்பொழுது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் ஸ்ட்ராங்க் ரூம் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை நேரில் பார்வையிட்டு அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் முறை குறித்து ஆட்சியர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.




 


பின்னர், ஆட்சியர் பிரபுசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், கரூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன கரூர் மாநகராட்சிக்கு தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன சராசரியாக ஒரு வார்டுக்கு மூன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒரு சுற்றுக்கு சுமாராக 4 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார். பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரடியாக கண்காணிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி கரூர் மாவட்டத்தில் 92 வாக்கு பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. இங்கு வாக்குப்பதிவு அனைத்தும் நேரடியாக இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.